காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலையிலும் பெண்களுக்கு 33 சதவீதம் - ராகுல் காந்தி அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2019      இந்தியா
rahul 2019 03 03

Source: provided

 சித்ரதுர்கா : காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலையிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா, கோலார் உள்பட சில இடங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த தேர்தல் வெறுப்பு, கோபம் மற்றும் பிளவுபடுத்தும் அரசியலுக்கும், அன்பு, பாசம் மற்றும் சகோதரத்துவத்துக்கும் இடையேயான போர். ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவோம் என்ற பிரதமர் மோடியின் பொய் பிரசாரத்துக்கும், வறுமை கோட்டுக்கு கீழே வாழும் ஒவ்வொரு பெண்ணின் வங்கி கணக்கிலும் ரூ.3.6 லட்சம் (வருடத்துக்கு ரூ.72 ஆயிரம் வீதம் 5 வருடங்களுக்கு) செலுத்தப்படும் என்ற காங்கிரஸ் வாக்குறுதிக்கும் இடையேயான போர்.

 விவசாயி, தொழிலாளர், வேலையில்லாதவர் வீட்டு வாசல்களில் காவலாளி நிற்பதை பார்த்திருக்கிறீர்களா? அனில் அம்பானி வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள். இந்த காவலாளி 15 முதல் 25 பணக்காரர்களின் வீடுகளில் மட்டுமே காவலுக்கு இருக்கிறார். கடனை செலுத்தாத விவசாயிகளை சிறையில் அடைக்கிறார். ஆனால் அனில் அம்பானியை சிறையில் அடைப்பதில்லை.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முதல் நடவடிக்கையாக மகளிருக்கு சட்டமன்றம், பாராளுமன்றம் ஆகியவைகளில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். அரசு வேலையிலும் பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கப்படும். ஜி.எஸ்.டி. வரி முறையில் மாற்றம் செய்யப்படும். ஒருமுனை வரியாக மாற்றுவதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைவார்கள். இந்திய பொருளாதாரத்தையும், மக்களையும் சீரழித்த கப்பர் சிங் டாக்ஸ் (ஜி.எஸ்.டி.) வரிமுறைக்கு முடிவுகட்டப்படும்.இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து