சபரிமலை விவகாரத்தில் மோடி பொய் சொல்கிறார்: பினராயி குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2019      இந்தியா
Pinarayi 2019 04 10

திருவனந்தபுரம், சபரிமலை விவகாரத்தில் மோடி பொய் கூறுவது மட்டுமின்றி, இரட்டை வேடமும் போடுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டி உள்ளார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிராக கடந்த சில மாதங்களுக்கு முன் கேரளா முழுவதும் பெரும் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. தற்போது இந்த பிரச்சினை அடங்கி இருக்கும் நிலையில், பா.ஜனதா போன்ற அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தை தங்கள் பிரசாரத்தில் பயன்படுத்தி வருகின்றன.குறிப்பாக தமிழகத்தில் சமீபத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆபத்தான விளையாட்டில் ஈடுபடுவதாக புகார் கூறினார். சபரிமலை விவகாரத்தில் போராடிய பக்தர்களை கேரள அரசு சிறையில் அடைத்திருப்பதாக குற்றம் சாட்டிய அவர், இந்துக்களின் கலாசாரம் மற்றும் நம்பிக்கையை மாநில அரசு சீரழிப்பதாக தெரிவித்தார்.

இவ்வாறு சபரிமலை விவகாரத்தில் மாநில அரசை குற்றம் சாட்டிய பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்து உள்ளார். கொல்லத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

சபரிமலை விவகாரத்தில் மோடி கூறியிருப்பது முற்றிலும் பொய். இதுபோன்ற ஒரு தவறான கருத்தை பிரதமர் எப்படி கூற முடியும்? சபரிமலை விவகாரத்தில் யாராவது கைது செய்யப்பட்டால், அவர்கள் சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு இருப்பார்கள்.மற்ற மாநிலங்களில் சங் பரிவார் அமைப்பு தொண்டர்கள் சிறைக்கு செல்லாமல் இருக்கலாம் அல்லது பிரதமரின் தலையீடு காரணமாக அவர்களுக்கு எதிராக எந்த வழக்கும் இல்லாமல் இருக்கலாம். இதில் பிரதமரின் தயவுக்கு நன்றி. ஆனால் கேரளாவில் அது நடக்காது. யார் எந்த தவறு செய்தாலும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.சபரிமலை விவகாரத்தில் மோடி பொய் கூறுவது மட்டுமின்றி, இரட்டை வேடமும் போடுகிறார். சபரிமலையில் கடந்த ஆண்டு உச்சக்கட்ட போராட்டம் நடந்து கொண்டிருந்த போது, அங்கே 144 தடை உத்தரவு போடக்கூறியது மத்திய அரசுதான். அதைப்போல அங்கு போராட்டத்தை கட்டுப்படுத்த மத்திய படைகளை அனுப்பவும் அவர்கள் முன் வந்தார்கள். அப்படி கூறியவர்கள் தற்போது மாநில அரசு மீது பழிபோடுகிறார்கள்.பாராளுமன்ற தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக சபரிமலை விவகாரத்தையோ, ஐயப்ப சுவாமியின் பெயரையோ கட்சியினர் பயன்படுத்தக்கூடாது என மாநில தலைமை தேர்தல் கமிஷனர் தீகரம் மீனா கூறி இருக்கிறார். எனவே இந்த விவகாரத்தை தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தி இருக்கும் பிரதமர் மீது தேர்தல் நடத்தை விதி மீறல் நடவடிக்கை எடுக்கவும் முடியும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து