முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவை தாக்கிய சூறாவளி சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், அமெரிக்காவை தாக்கிய சூறாவளியில் 2 சிறுவர்கள் உள்பட 8 பேர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள டெக்சாஸ், அலபாமா, மிச்சிபிசி ஆகிய மாகாணங்களை பலத்த சூறாவளி தாக்கியது. மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று சூழன்றடித்தது. இதில் 3 மாகாணங்களில் உள்ள பல்வேறு நகரங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின. குறிப்பாக டெக்சாஸ் மாகாணத்தின் ஏஞ்சலினா கவுண்டி, அல்டோ, மிச்சிபிசியின் மெனாரே மற்றும் அலபாமாவின் பர்மிங்காம் ஆகிய நகரங்கள் சின்னாபின்னமாகின. சூறாவளி காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பந்தாடப்பட்டன. பல இடங்களில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. நெடுஞ்சாலைகளில் இருந்த அறிவிப்பு பலகைகள் மற்றும் விளம்பர பலகைகள் நொறுங்கி விழுந்தன. மேலும் பல பகுதிகளில் சாலைகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சூறாவளி காற்றில் சிக்கி மின்கம்பங்கள் சரிந்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

சூறாவளியை தொடர்ந்து ஒரு சில இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கின்றன. இதனால் மக்கள் வீடுகளை இழந்து, பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். சூறாவளி மற்றும் அதுதொடர்பான விபத்துகளில் 2 சிறுவர்கள் உள்பட 8 பேர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 50 -க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து