முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் - சத்யபிரதா சாகு பேட்டி

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பாராளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஓட்டுப்பதிவுக்கான

அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் வருமானவரித்துறை சோதனை உட்பட அனைத்து நடவடிக்கைகளும், கட்சி பாகுபடின்றி எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில், ஒரே கட்டமாக, பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. வேலூர் நீங்கலாக, 38 தொகுதிகள் தேர்தலை எதிர்கொண்டுள்ளன. இதுதவிர, காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு, முதற்கட்டமாக, இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை, தேர்தல் ஆணையம் முழுவீச்சில் முடுக்கிவிட்டுள்ளது. வாக்குப்பதிவு மையங்களுக்கு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாடு எந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்திட உதவும், விவிபேட் எனப்படும் ஒப்புகைச்சீட்டு எந்திரங்கள், அழியாத மை, கண்காணிப்பு கேமிராக்களுடன் கூடிய, இணையவசதி உள்ள மடிக்கணினிகள் உள்ளிட்ட 101 வகையான பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

அறிக்கையின்படியே...

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, தலைமைச் செயலகத்தில், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தி.மு.க.வினரை மட்டுமே குறிவைத்து வருமானவரித்துறை சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சத்யபிரதா சாகு, தேர்தல் விதிமீறல் தொடர்பாக, 4 ஆயிரத்து 400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், வருமானவரித்துறை அறிக்கையின்படியே, வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஜி.பி.எஸ். கருவி மூலம்...

ஆண்டிப்பட்டி வருமானவரித்துறை சோதனை விவகாரத்தில், தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் வருமானவரித்துறையின் அறிக்கை கிடைத்த பிறகு, நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்படுவதாக, சத்யபிரதா சாகு தெரிவித்தார். வாக்குப்பதிவுக்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருப்பதாக கூறினார். வெப்காஸ்டிங் உள்ளிட்ட 4 வெவ்வேறு வழிமுறைகள் மூலமாக, வாக்குப்பதிவு கண்காணிக்கப்படும் என்றும், சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

ஆணையம் அழைப்பு

வாக்காளர், தங்கள் ஜனநாயக கடமையாற்ற அனைத்து ஏற்பாடுகள் தயார் நிலையில், வைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். பிரம்மாண்ட தேர்தல் திருவிழாவில் பங்கேற்று, வாக்களிப்பதன் மூலம், தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றுமாறு, வாக்காளர்களுக்கு, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருக்கிறது.

11 ஆவணங்கள்...

வாக்காளர் அடையாள அட்டை மட்டுமின்றி, புகைப்படத்துடன் கூடிய, வேறு 11 ஆவணங்களையும் காண்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசுகளால் பணிக்காக வழங்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை காட்டி வாக்களிக்க முடியும். புகைப்படத்துடன் கூடிய வங்கி, அல்லது அஞ்சலக கணக்கு புத்தகம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட மின்னணு அட்டை, நூறுநாள் பணி அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காட்டியும் வாக்களிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து