உணவு கொடுக்கும் போது வளர்த்த மான் தாக்கியதில் ஒருவர் பலி

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2019      உலகம்
deer attack one kill 2019 04 18

சிட்னி : ஆஸ்திரேலியாவில் வீட்டில் வளர்த்த சிவப்பு மானுக்கு உணவு கொடுக்கும் போது அது தாக்கியத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார்.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள வான்கரட்டா நகரை சேர்ந்தவர் பவுல் மெக்டொனால்டு. இவர் தனது வீட்டில் சிவப்பு மான் ஒன்றை செல்லப் பிராணியாக வளர்த்து வந்தார். மிகப் பெரிய அளவில் வளரக் கூடிய இந்த சிவப்பு மான் ராட்சத கொம்புகளை கொண்டிருக்கும். பார்ப்பதற்கு மிகவும் மூர்க்கமாக இருக்கும். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை பவுல் மெக்டொனால்டு, மானுக்கு உணவு கொடுப்பதற்காக சென்றார். மான் அடைத்து வைக்கப்பட்டிருந்த வேலிக்கு மிக அருகில் நின்று உணவு கொடுத்துக் கொண்டிருந்த அவரை, மான் திடீரென தாக்கியது. பவுல் மெக்டொனால்டின் அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவியும், மகனும் ஓடி வந்தனர். கணவரை காப்பற்றுவதற்காக அருகில் சென்ற பவுல் மெக்டொனால்டின் மனைவியையும் மான் கொடூரமாக தாக்கியது. இதில் இருவரும் நிலைகுலைந்து போயினர்.

இது பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மானை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தி விட்டு, இருவரையும் மீட்டனர். அங்கு தயார் நிலையில் இருந்த ஆம்புலன்சில் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது பவுல் மெக்டொனால்டு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, அவரது மனைவி ஹெலிகாப்டர் மூலம் மெல்போர்னில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து