ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்களிக்க ஆர்வமுடன் வந்த இளம் வாக்காளர்கள் அசம்பாவித சம்பவங்கள் இல்லாமல் அமைதியாக நடந்தது
ராமநாதபுரம், - ராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் அதிக ஆர்வமுடன் முதன் முறை வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். தொகுதி முழுவதும் எந்த பகுதியிலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் அமைதியாக வாக்குப்பதிவு நடந்தது.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அறந்தாங்கி, திருச்சுழி, பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தொகுதியில் 7,75,765 ஆண்கள், 7,82,063 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 82 பேர் என 15, 57,910 வாக்காளர்கள் உள்ளனர். 18 முதல் 19 வயது வரை முதன் முறை வாக்காளர்கள் 21,867 உள்ளனர். தொகுதியில் 1,916 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 792 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு செயல்பாடுகளை நுண் பார்வையாளர்கள் இணைய வழி வெப் கேமரா மூலம் கண்காணித்தனர். மண்டல அலுவலர்கள், போலீசார், ஊர்க்காவல் படை வீரர்கள் என 16,247 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்களிக்க வசதியாக சக்கர நாற்காலி, சாய்தளம், அழைத்து செல்வதற்கு தன்னார்வலர்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. கல்லூரி மாணவ, மாணவியர் உள்ளிட்ட முதன் முறை வாக்காளர்கள் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டினர்.
ராமநாதபுரம் பாரதி நகர், வாலாந்தரவை, மேதலோடை உள்பட பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்து செயல்படாமல் இருந்த நிலையில் உடனடியாக சரிசெய்யும், மாற்று எந்திரங்கள் பொருத்தியும் உடனடியாக வாக்குபதிவு தொடங்கியது. ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கலெக்டரும் தேர்தல் அலுவலருமான ஆட்சியர் வீரராகவ ராவ், அவரது மனைவி ஹர் சந்திகாவுடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். இந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு எலுமிச்சை பழச்சாறு வழங்கப்பட்டது. ராமநாதபுரம் அறிஞர் அண்ணா நகராட்சி பள்ளியில் தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன், கலைவாணி மெட்ரிக். பள்ளியில் அன்வர் ராஜா எம்.பி., நெல்லை பாளையங்கோட்டை மகராஜா நகர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளி விழா மேல்நிலை பள்ளியில் பாஜக., வேட்பாளர் நயினார் நாகேந்திரன், நெல்லை குருவாடி துவக்கப்பள்ளியில் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி, மணக்குடி தொடக்கப் பள்ளியில் அமமுக., வேட்பாளர் ந. ஆனந்த் வாக்களித்தனர். பதற்றமானவை என கண்டறிப்பட்ட வாக்குச்சாவடிகளில் துணை ராணுவம், தமிழ்நாடு சிறப்பு போலீசார் கூடுதல் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
வாக்கு சதவீதம்
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி,
பரமக்குடி தொகுதியில் 52.25, திருவாடானை தொகுதியில் 59.85, ராமநாதபுரம் தொகுதியில் 61.66, முதுகுளத்தூர் தொகுதியில் 52.56, அறந்தாங்கி தொகுதியில் 64.19, திருச்சுழி தொகுதியில் 63.07 சதவீத வாக்குகள் பதிவாகின. ஓட்டுமொத்தமாக 5 மணி நிலவரப்படி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்கு சதவிதம் 58.63 ஆகும். பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 5 மணி நிலவரப்படி 52.25 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.