ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடந்த பயங்கரம்: தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு: 215 பேர் பலி - ஊரடங்கு உத்தரவு அமல்: வலைதளங்கள் முடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019      உலகம்
SL terror attack 2019 04 21

கொழும்பு : ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவங்களில் கிட்டத்தட்ட 215 பேர் உடல் சிதறி ரத்தம் சொட்ட சொட்ட பலியானார்கள். 400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து இலங்கையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களும் முடக்கப்பட்டுள்ளன.

அடுத்தடுத்து குண்டு வெடிப்பு

நாடு முழுவதும் நேற்று இயேசு பிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அதே போல இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களிலும் நேற்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் ஆலயங்களில் திரண்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை 8.45 மணி அளவில் கொழும்பில் உள்ள 3 தேவாலயங்கள், 4 நட்சத்திர ஓட்டல்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

6 டன் எடை கொண்டவை

கொழும்பில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம், கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியில் உள்ள தேவாலயம் ஆகிய இடங்களில் பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருந்த போது திடீரென சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுகள் மொத்தம் 6 டன் எடை கொண்டவை என்று கூறப்படுகிறது. குண்டு வெடித்ததும் தேவாலயங்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது அங்கு கேட்ட மரண ஓலம் நெஞ்சை பிளக்கும் வண்ணம் இருந்தது. இதே போல் கொழும்பில் உள்ள ஷாங்ரிலா, சினமான் கிராண்ட், கிங்ஸ்பரி ஆகிய நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டு வெடித்தது. இதனால் அங்கிருந்தவர்களும் தூக்கி வீசப்பட்டு பலியானார்கள். 

215 பேர் பலி

3 தேவாலயம், 4 நட்சத்திர ஓட்டல்கள் ஆகிய 6 இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களால் இலங்கை முழுவதும் பெரும் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது. இந்த சம்பவங்களில் மொத்தம் 215 பேர் வரை பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 400-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அங்குள்ள தேசிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிறகு மீண்டும் சில இடங்களில் குண்டுகள் வெடித்தன. அதன்படி மொத்தம் 8 இடங்களில் குண்டுகள் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டவரும் பலி

முன்னதாக நட்சத்திர ஓட்டல்களில் சுற்றுலா பயணிகள் தங்கியிருந்தனர். இதனால் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பிரார்த்தனையில் குழந்தைகளும் ஏராளமாக பங்கேற்று இருந்தனர். இதனால் குண்டு வெடிப்பில் பல குழந்தைகளும் உயிரிழந்து இருக்கலாம் என தெரிகிறது. மட்டக்களப்பு பகுதி தமிழர்கள் அதிகம் நிறைந்த இடமாகும். இதனால் ஏரராளமான தமிழர்கள் உயிரிழந்து இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த சம்பவத்தில் கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணும் பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு

இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களால் கொழும்பில் பதட்டம் நிலவுகிறது. நகரின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் யார் என்று தெரியவில்லை. இருப்பினும் அங்குள்ள தீவிரவாதிகள் இந்த நாசவேலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்கவில்லை. இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து இலங்கையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தலைவர்கள் கண்டனம்

மேலும் சமூக வலைதளங்களும் முடக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக இலங்கையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை படையினர்

இலங்கையில் சாங்கிரி லா ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தற்கொலைப்படையை சேர்ந்த ஜகரான் ஹசீம் என்பவரும், மட்டக்களப்பு தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் அபுமுகமது என்பவரும் சம்பந்தப்பட்டிருப்பதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தையடுத்து இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, தனது அமைச்சரவை சகாக்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இலங்கையில் அமைதியை ஏற்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டின் பொருளாதார சீர்திருத்த அமைச்சர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்தார். பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிகை ராதிகா தப்பினார்

பிரபல தமிழ் நடிகையும், நடிகர் சரத்குமாரின் துணைவியுமான ராதிகா கொழும்பு சென்றிருந்தார். அங்கு அவர் சின்னமன் கிராண்ட் ஓட்டல் என்ற நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். குண்டுவெடிப்பதற்கு சற்று முன்தான் அவர் வெளியில் சென்றுள்ளார். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பியதாக தெரியவந்துள்ளது. இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளது. கடவுள் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். நான் தற்போதுதான் சின்னமன் கிராண்ட் ஓட்டலில் இருந்து கிளம்பினேன். அங்கும் குண்டு வெடித்துள்ளது. நம்ப முடியவில்லை. இது அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். அவரின் டுவீட்டை பார்த்த ரசிகர்கள், ராதிகா நல்ல வேளை நீங்கள் பிழைத்துக் கொண்டது என்று கூறி நிம்மதி அடைந்துள்ளனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து