முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்ஜினியரிங் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மே 2-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: அரசு அறிவிப்பு - பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங் ஜூலை 3-ம் தேதி ஆரம்பம்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : என்ஜினியரிங் விண்ணப்பங்களை மே மாதம் 2-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங் ஜூலை 3-ம் தேதி தொடங்குகிறது என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட்டது. அதற்கு முன்பே பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள், தங்களது உயர்கல்விக்கான வாய்ப்புகள் குறித்து தேடலில் இறங்க தொடங்கி விட்டனர். பல்வேறு கலை அறிவியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வழங்க தொடங்கி விட்டனர். இந்த நிலையில் என்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்குவதற்கான அறிவிக்கை இன்று வெளியாகிறது. இதைத் தொடர்ந்து என்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மே 2-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வீட்டியிலிருந்தபடியே பதிவு செய்து கொள்ளலாம். அல்லது உதவி மையங்கள் மூலமும் பதிவு குறித்து அறிந்து கொள்ளலாம். என்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண் வரும் ஜூன் மாதம் 3-ம் தேதி வெளியிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து மாணவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்யும் பணி வரும் மே 6-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. பொறியியல் தர வரிசை பட்டியல் வரும் 17-ம் தேதி வெளியி்டப்படுகிறது.

இதையடுத்து வரும்  ஜூன் 20-ம் தேதி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கவுன்சிலிங் தொடங்குகிறது. முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான கவுன்சிலிங் ஜூன் 21-ம் தேதியும், விளையாட்டுத் துறையில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கான கவுன்சிலிங் வரும் ஜூன் மாதம் 22-ம் தேதியும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியலில் பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங் வரும் ஜூலை மாதம் 3-ம் தேதி தொடங்குகிறது.  இதற்கான கவுன்சிலிங் 28-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுக் கவுன்சிலங் ஜூன் 28-ம் தேதி தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங்கும் நடைபெறுகிறது. இதனிடையே பிளஸ்2 சிறப்புத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான சிறப்பு கவுன்சிலிங் ஜூலை 29-ம் தேதியும் ஆதி திராவிடர்களுக்கான பிரிவில் அருந்ததி மாணவர்களுக்கான கவுன்சிலிங் வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது. இத்தோடு பொறியியல் கவுன்சிலிங், வரும் 30-ம் தேதியுடன் நிறைவடையும் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங் அண்ணா பல்கலைக் கழகத்தின் முலம் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு தமிழகத்தின் தொழிற்கல்வி ஆணையரகத்தின் மூலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  இதற்கிடையில் கவுன்சிலிங் விண்ணப்பங்களுக்கான கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். எனினும் அண்ணா பல்கலைக் கழகத்தின் பொறியியல் கட்டணத்தில் சிறிது உயர்வு இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இது குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய அரசின் நிதி உதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களில் கட்டணங்கள் பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பொறியியல் கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கட்டணஉயர்வு எவ்வளவு என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அந்த உயர்வு நியாயமான அளவிலேயே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து