முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறைந்து 32 ஆண்டுகள் ஆகியும் ‘அனைவரின் நெஞ்சங்களிலும் எம்.ஜி.ஆர். வாழ்கிறார் - அடிமைப்பெண்’ பட பொன் விழாவில் சைதை துரைசாமி பேச்சு

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மறைந்து 32 ஆண்டுகள் ஆகிய பின்னரும் அனைவரது நெஞ்சங்களிலும் எம்.ஜி.ஆர். வாழ்ந்துகொண்டு இருக்கிறார் என்று சென்னையில் நடந்த ‘அடிமைப்பெண்’ படத்தின் பொன் விழாவில் சைதை துரைசாமி பேசினார்.

எம்.ஜி.ஆர். நடித்து, இயக்கிய ‘அடிமைப்பெண்’ படத்தின் பொன்விழா, எம்.ஜி.ஆரின் 102-வது மனிதநேய விழா மற்றும் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி மன்றத்தின் 5-ம் ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா சென்னை தியாகராயநகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கத்தில்நடந்தது.விழாவுக்கு, பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், மனிதநேய இலவச கல்வி அறக்கட்டளையின் தலைவருமான சைதை துரைசாமி தலைமை தாங்கி, ‘அடிமைப்பெண்’ படத்தின் பொன்விழா சிறப்பு மலரை வெளியிட்டார். அதன் பிரதிகளை நடிகை லதா உள்பட நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். விழாவில் சைதை துரைசாமி பேசியதாவது:-எம்.ஜி.ஆருக்கு இணையாக உலகத்தில் யாருமே இல்லை. இதனால் தான் அவரை அவதாரபுருஷன் என்று சொல்கிறோம். அவதார புருஷர்களுக்கு உரிய பண்புகளோடு அவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆர். உடன் நடித்த நடிகர்கள் தங்களுடைய வாரிசுகளுக்காக தோட்டங்களை வாங்கி போட்டார்கள். ஆனால் என் தலைவரோ அனாதை, ஆதரவற்ற குழந்தைகளுக்காக 33 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தார். இதனால் தான் அவர் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.கதாநாயகனாக தோன்றி கதாநாயகனாகவும், முதல்-அமைச்சராக தோன்றி முதல்-அமைச்சராகவும் மறைந்தவர். அ.தி.மு.க.வின் முதல் மேயராக நான் வருவேன் என்று 1980-ம் ஆண்டு என்னிடம் கூறினார். அவர் உயிரோடு இருந்த 1987-ம் ஆண்டு வரையிலும் மாநகராட்சி தேர்தல் நடைபெறவில்லை. 2011-ம் ஆண்டு யார் என்னை உள்ளே நுழையவிடக்கூடாது என்று நினைத்தார்களோ, அவர்களின் சூழ்ச்சியை முறியடித்து ஜெயலலிதா என்னை மேயர் ஆக்கினார்.50 வயதுக்கு மேல் உள்ள 80 சதவீதம் பேர் எம்.ஜி.ஆர். ரசிகர்கள். 30 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் எம்.ஜி.ஆரை நினைத்துக்கொண்டும், படிக்கும் இளைஞர்களுக்கு பாடமாகவும் எம்.ஜி.ஆர். இருக்கிறார். மானுட நலனுக்காக தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்துக்கொண்டவர். மனிதனாக பிறந்த அவதாரம் என்பதால் மறைந்து 32 ஆண்டுகள் ஆகியும் அனைவரது நெஞ்சங்களிலும் எம்.ஜி.ஆர். வாழ்ந்து கொண்டிருக்கிறார்.தாய்-தந்தைக்கு செய்யும் செலவாக கருதி எம்.ஜி.ஆருக்காக அவருடைய பக்தர்கள் மாதந்தோறும் சராசரியாக ஆயிரம் ரூபாய் செலவு செய்கிறார்கள். எம்.ஜி.ஆர். புகழ் என்றென்றும் நீடிக்கும். எம்.ஜி.ஆர். பாடல்களை குழந்தைகள் கேட்டால் மிகச்சிறப்பாக வளருவார்கள். எனவே அந்த பணியை எம்.ஜி.ஆர். பக்தர்கள் செய்ய வேண்டும். மேலும் இளைஞர்கள், மாணவர்களுக்கு எம்.ஜி.ஆர். பாடல்களை போட்டும், அனுப்பியும் கேட்க வைக்கவேண்டும். இவ்வாறு செய்தால் எம்.ஜி.ஆர். மையமாக இந்த மண் மாறும். இவ்வாறு அவர் பேசினார்.உரிமைக்குரல் பி.எஸ்.ராஜூ வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சிகளை மூத்த பத்திரிகையாளர் துரை கருணா தொகுத்து வழங்கினார்.விழாவில் நடிகை ராஜஸ்ரீ, கவிஞர் முத்துலிங்கம், எம்.ஜி.ஆரின் ஆடை அலங்கார நிபுணர் எம்.ஏ.முத்து, எழுத்தாளர் சுதாங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக உலக எம்.ஜி.ஆர். பேரவை மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காகவும், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் வைக்க துடிப்பான நடவடிக்கைகளை எடுத்ததற்காகவும் சைதை துரைசாமிக்கு, பெங்களூருவை சேர்ந்த எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து