முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகருக்கு ஓட்டு போட சிறப்பு சலுகை அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை - சத்யபிரதா சாஹு திட்டவட்டம்

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஓட்டு போட சிறப்பு சலுகை அளித்த அதிகாரி மற்றும் நடிகர் ஸ்ரீகாந்துக்கு கையில் மை வைத்து அனுப்பிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

கடந்த 18-ம் தேதி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் உட்பட பலர் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர். பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் வளசரவாக்கத்தில் உள்ள குட் ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிக்க மனைவியுடன் சென்ற போது அங்கு அவரது மனைவிக்கு மட்டும் தான் ஓட்டு இருந்தது. வாக்காளர் பட்டியலில் இருந்து சிவகார்த்திகேயனின் பெயர் நீக்கப்பட்டிருந்ததால் அவர் வாக்களிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அவர் வாக்களிக்க முடியவில்லை.

கடந்த சட்டசபை தேர்தலின் போது இதே வாக்குச்சாவடியில் மனைவியுடன் வந்து வாக்களித்தேன் என்று சிவகார்த்திகேயன் கூறி விட்டு திரும்பி சென்றார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு வாக்கு இல்லை என செய்தி வெளியானது. அவர் மீண்டும் மதியம் இரண்டு மணிக்கு மேல் வாக்குச்சாவடிக்கு வந்தார். அவருக்கு சிறப்புச் சலுகை கொடுத்து கைரேகை பதிவு செய்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது.

இதை அங்கிருந்த அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகள் சிலர் ஆட்சேபித்துள்ளனர். இந்நிலையில் வாக்களித்துவிட்டுச் சென்ற சிவகார்த்திகேயன் வாக்களித்ததாக ஒரு போட்டோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர் எப்படி வாக்களித்தார் என்ற சர்ச்சை எழுந்தது.

நீக்கப்பட்ட பெயர் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் இருந்ததால், இந்த சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதே போன்று விஜய் டிவி தொகுப்பாளர் திவ்யதர்ஷினியும் தனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதுவும் சர்ச்சையாகி வருகிறது.

இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் சிவகார்த்திகேயனுக்கு விதியை மீறி வாக்களிக்க எப்படி அனுமதி அளிக்கப்பட்டது. ஸ்ரீகாந்த் எப்படி வாக்களித்தார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த தலைமை தேர்தல் அதிகாரி, அவ்வாறு அனுமதித்தது தவறு. சிவகார்த்திகேயனுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் எப்படி வாக்களிக்க அனுமதித்தார்கள் என்று கேட்டுள்ளோம். வாக்களிக்க அனுமதித்தது தவறு. வாக்களிக்க அனுமதி அளித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அதே போன்று நடிகர் ஸ்ரீகாந்த் விரலில் மை மட்டும் வைக்கப்பட்டது. அவர் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. மை வைக்க யார் அனுமதி கொடுத்தது என்பது குறித்தும் அறிக்கை கேட்டுள்ளோம். அதன்மீதும் தவறிருந்தால் நடவடிக்கை வரும் என்று தெரிவித்தார்.

இதே போன்று நடிகர்கள் ரமேஷ் கண்ணா, ரோபோ சங்கர் நடிகை சோனியா போஸ், டிரம்ஸ் சிவமணி போன்றவர்களுக்கும் வாக்கு இல்லை. நடிகர் ஸ்ரீகாந்துக்கும் வாக்கு இல்லை. ஆனால் அவர் கையில் மை மட்டும் வைத்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து