முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு - சந்தேகத்திற்கிடமான 3 பேர் படமும் வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2019      உலகம்
Image Unavailable

கொழும்பு : இலங்கையில் அடுத்தடுத்து 8 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 3 பேரின் படம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் அடுத்தடுத்து 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது. 500-க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் சுமார் 100 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இந்த தாக்குதலின் பின்னணியில் இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அந்நாட்டின் அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த தொடர் குண்டு வெடிப்புகளில் சம்பந்தப்பட்ட 30 பேரை இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தீவிர உறுப்பினர் ஆவார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சர்வதேச அளவில் சதிவலை பின்னப்பட்டு இந்த தாக்குதல் நடந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால் அந்த இயக்கத்துக்கு மிகப்பெரிய தாக்குதல்கள் நடத்தும் அளவுக்கு தொழில் நுட்ப மற்றும் ஆள் பலம் இல்லை என்று கூறப்படுகிறது. என்றாலும் தாக்குதலுக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் உறுப்பினர்கள் தான் அனைத்து உதவிகளையும் செய்து இருக்கிறார்கள் என்பது உறுதியாகி இருக்கிறது. வெடிகுண்டுகளை தயாரிப்பது, அவற்றை எடுத்துச் செல்வது போன்ற வேலைகளை அந்த இயக்கம் ஒருங்கிணைத்து செய்து கொடுத்துள்ளது.

தாக்குதலை திட்டமிட்டு நடத்தியது ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்று தெரிய வந்துள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவு டெலிகிராம் சேனல் ஒன்றில் மூன்று தற்கொலைப் படை பயங்கரவாதிகளின் படம் வெளியிடப்பட்டது.

அந்த படங்களில் அபு உபைதா, அப்துல்பாரா, அப்துல் முக்தர் ஆகிய 3 ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்ளனர். அவர்கள் ஐ.எஸ். கொடிகளை பிடித்தபடி நிற்கிறார்கள். இவர்கள் மூவரும் கொழும்பில் தாக்குதல் நடத்திய தற்கொலை படையில் இடம் பெற்று இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த தற்கொலை பயங்கரவாதிகள் கடந்த 3 மாதங்களாக கொழும்பில் தங்கி இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தற்கொலை தாக்குதலுக்கு வெளிநாட்டிலும், கொழும்பு புறநகரிலும் பயிற்சி பெற்றதாக தெரிய வந்துள்ளது.

இவர்களில் எத்தனை பேர் இலங்கைவாசிகள், எத்தனைபேர் வெளிநாட்டு பயங்கரவாதிகள் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்பட வில்லை. இது தொடர்பாக இலங்கை ராணுவத்தினர் தீவிர விசாரணை மேற் கொண்டுள்ளனர். இதற்காக சர்வதேச அளவில் பல்வேறு நாட்டு உளவுத்துறையின் ஒத்துழைப்பை இலங்கை நாடு கேட்டுள்ளது.

முதல் கட்ட விசாரணையில் தற்கொலை பயங்கரவாதிகள் இலங்கையைச் சேர்ந்த நடுத்தர வகுப்பு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்த தகவலை இலங்கை உள்துறை மந்திரி ஆலவதுவாலா உறுதிப்படுத்தி உள்ளார்.

நியூசிலாந்து நாட்டில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு நிச்சயம் பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் தமது ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதற்காக பெரிய அளவில் உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அறிவித்து இருந்தனர். அந்த அடிப்படையில் தான் இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டுள்ள விதம் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்வதாக இருக்கிறது. மாலத்தீவில் உள்ள தங்களது பயங்கரவாத ஆதரவாளர்கள் மூலம் இலங்கைக்குள் ஊடுருவி அவர்கள் கைவரிசை காட்டி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையே இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா அமைப்பும் உதவிகள் செய்து இருப்பதாக இந்தியா கூறி உள்ளது. இது தொடர்பாக இந்தியா சார்பில் இலங்கைக்கு பல்வேறு ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து