வாட்சன் அதிரடியால் ஹைதராபாத்தை பந்தாடிய சிஎஸ்கே: ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2019      விளையாட்டு
watson stunning 2019 04 24

சென்னை : ஐ.பி.எல் தொடரில், சென்னையில் நடைபெற்ற ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ப்ளே ஆஃப் சுற்றை சி.எஸ்.கே. உறுதி செய்துள்ளது.

சென்னை பந்துவீச்சு...

சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில்  நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடர்ந்த ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் பேர்ஸ்டோவ் ரன் ஏதும் எடுக்காமல், ஹர்பஜன் பந்தில் ஆட்டமிழந்தார்.

பாண்டே அபாரம்...

இதையடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் வார்னரும், மனீஷ் பாண்டேவும் அதிரடியாக ரன் குவித்தனர். வார்னர் 57 ரன்களில் அவுட் ஆன நிலையில், மனீஷ் பாண்டே கடைசி வரை அவுட் ஆகாமல் 83 ரன்கள் குவித்தார். ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது.

ரெய்னா 38 ரன்...

இதையடுத்து பேட்டிங்கை தொடர்ந்த சென்னை அணியின் தொடக்க வீரர் டூ பிளசிஸ் 1 ரன்னில் ரன் அவுட் ஆனார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ரெய்னா வாட்சன் உடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 77 ரன்கள் எடுத்தனர். சுரேஷ் ரெய்னா 24 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

வாட்சன் அதிரடி...

எனினும், மறுமுனையில் வாட்சன் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். குறிப்பாக சந்தீப் சர்மா வீசிய ஓவர்களை வாட்சன் நொறுக்கினார். அத்துடன் 53 பந்துகளை மட்டுமே சந்தித்த வாட்சன் 6 சிக்ஸர்கள் உள்பட 96 ரன்கள் குவித்து சென்னையின் வெற்றியை உறுதி செய்தார். இவர் 17-வது ஒவரில் புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சில் அவுட்டாகி சதத்தை நழுவவிட்டார்.

முதலிடத்திற்கு...

இறுதியில் சென்னை அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 176 ரன்கள் சேர்த்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம், சென்னை அணி 16 புள்ளிகளுடன், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. மேலும், ப்ளே ஆஃப் சுற்றுக்கு நுழைவதை உறுதி செய்துள்ளது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து