முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி நிச்சயம் எளிமையாக்கப்படும்: பிரச்சாரத்தில் ராகுல் காந்தி உறுதி

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

ஜலோர், ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி 5 ஆண்டுகளில் மக்களுக்கு அநீதி இழைத்துள்ளார் என கூறியுள்ளார்.
   
ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் ஏப்ரல் 29 மற்றும் மே 6 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜலோர் பகுதியில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு அநீதி இழைத்துள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன் 'நல்ல நாள் வரும்' என கூறிக் கொண்டிருந்தார். தற்போது 'நான் உங்கள் காவலாளி' என எங்கு சென்றாலும் கூறி வருகிறார்.  

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்றவற்றால் ஏழைகள், சிறுகுறுவணிகர்கள், தொழிலாளர்கள் என அனைவரிடம் இருந்தும் பணத்தை பறித்துக் கொண்டார். ஆனால் காங்கிரஸ் அறிவித்த நியாய் திட்டம் மக்களுக்கு நல்ல பலனை தரும். காங்கிரஸ், மத்தியில் ஆட்சி அமைத்தால் ஒரே வருடத்தில் 22 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். 

ஜி.எஸ்.டி நிச்சயம் எளிமையாக்கப்படும். 3 ஆண்டுகளுக்கு புதிதாக தொழில் தொடங்கும் யாரும் அனுமதி வாங்க தேவையில்லை. மேலும் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள், வங்கிக் கடன் கட்ட முடியவில்லை என்றால் சிறை செல்ல வேண்டிய அவசியமில்லை. எனவே சிந்தித்து வாக்களியுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து