முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டிபட்டி அமமுக தேர்தல் அலுவலகத்தில் 1.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முதலாவது குற்றவாளி செல்வம் கைது .

ஞாயிற்றுக்கிழமை, 5 மே 2019      தேனி
Image Unavailable

தேனி - தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கடந்த ஏப்ரல் 16ம் தேதி அமமுக  தேர்தல் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா  செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து போலீசார் மேற்கொண்ட சோதனையில் 1.48 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது சுமார் 150க்கும் மேற்பட்டோர் பறக்கும் படையினருடன் தகராறு செய்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.
அப்போது போலீசார் வானத்தை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுட்டனர். அதனை தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை சம்பவ இடத்திலேயே போலீசார் கைது செய்தனர். மேலும் பறக்கும் படை அதிகாரி நடராஜரத்தினம் அளித்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் உட்பட 150க்கும் மேற்பட்டோர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், அரசு ஊழியரைத் தாக்குதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரைத் தாக்கி கொள்ளையடித்தல், ஆபாசமாகப் பேசுதல், அனுமதியின்றி கூடுதல் ஆகிய 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முதலாவது குற்றவாளியான அமமுக மாவட்ட மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் செல்வம் என்பவரும், ஆண்டிபட்டி பேரூர் அமமுக செயலாளர் பொன்.முருகன் என்பவரும் தலைமறைவாகிவிட்டனர்.பொன்.முருகன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று இரவு வழக்கறிஞர் செல்வம் போடியில் உள்ள திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் படம் பார்த்துக்கொண்டிருந்த செல்வத்தை தியேட்டருக்குள்ளேயே போலீசார் கைது செய்தனர். போலீஸார் கைது செய்த போது வழக்கறிஞர் செல்வம் நெஞ்சு வலிப்பதாக கூறியதையடுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் செல்வம் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் அளித்த மருத்துவ அறிக்கையின் பேரில் செல்வம் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே பழனி, சுமன் ராஜ், பிரகாஷ்ராஜ், மற்றும் பிரபு, பொன்.முருகன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து