முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானின் உலோக ஏற்றுமதி மீது அமெரிக்கா பொருளாதார தடை

வெள்ளிக்கிழமை, 10 மே 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், அணுசக்தி ஒப்பந்தத்தின் சில நிபந்தனைகளை புறக்கணிப்பதாக ஈரான் அறிவித்ததை தொடர்ந்து, அந்நாட்டின் உலோக ஏற்றுமதி மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

அணு ஆயுதங்களை அதிக அளவில் கையிருப்பு வைத்து, பிறநாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த ஈரானுடன் அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தின. அணுசக்தி ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி ஈரான் தனது அணு ஆயுத கையிருப்பை படிப்படியாக குறைக்கவேண்டும். அதற்கு பிரதிபலனாக அந்நாட்டின் மீது விதித்த பொருளாதார தடைகளை மேற்கூறிய வல்லரசு நாடுகள் திரும்பப்பெற வேண்டும். ஒபாமா ஜனாதிபதியாக இருந்த போது, ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக தற்போதைய அதிபர் டிரம்ப், கடந்த ஆண்டு மே மாதம் 8-ம் தேதி அறிவித்தார். அதனை தொடர்ந்து, ஈரான் மீது டிரம்ப் நிர்வாகம் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. இதனால் இருநாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது. அமெரிக்காவின் தடைகளால் ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

இந்த நிலையில், அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகி, ஓராண்டு நிறைவடைந்த நிலையில், ஈரான் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அணுசக்தி ஒப்பந்தத்தின் சில நிபந்தனைகளை தற்காலிகமாக புறக்கணிப்பதாக ஈரான் அதிபர் ஹசன் ருஹானி அறிவித்தார். அதாவது, ஒப்பந்தத்தின்படி தம்மிடம் உள்ள மிகுதியான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை விற்க வேண்டும் என்ற நிபந்தனையை புறக்கணிப்பதோடு, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான யுரேனியத்தை செறிவூட்டும் பணியில் இனி ஈரான் ஈடுபடும். அத்துடன் அமெரிக்காவை தவிர்த்து, அணுசக்தி ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் மற்ற 5 நாடுகளும், இந்த ஒப்பந்தத்தை பாதுகாப்பதாக அளித்த வாக்குறுதியை 60 நாட்களுக்குள் நிறைவேற்றாவிட்டால் ஒப்பந்தத்தின் மேலும் சில நிபந்தனைகளை ஈரான் மீறும் என்றும் ஹசன் ருஹானி எச்சரித்தார்.

இந்த நிலையில், ஈரானின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக அந்நாட்டின் உலோக ஏற்றுமதி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. எண்ணெய்க்கு அடுத்தபடியாக ஈரானின் 2-வது முக்கிய ஏற்றுமதிப் பொருள் உலோகங்கள் ஆகும். எனவே ஈரானுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா இந்த தடையை விதித்து இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து