நேபாள ராணுவத்தின் அயராத முயற்சியால் எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இதுவரை5000 கிலோ குப்பைகள் அகற்றம்

வெள்ளிக்கிழமை, 10 மே 2019      உலகம்
Everest 2019 05 10-

காத்மண்டு, இமயமலையிலிருந்து 5,000 கிலோ குப்பை கழிவுகளை நேபாள ராணுவம் அகற்றியுள்ளது. இமயமலைப்பகுதியில் தேங்கியிருக்கும் குப்பை கழிவுகளை அகற்றும் முயற்சியில், கடந்த மாதம் 14-ம் தேதி முதல் நேபாள ராணுவத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேபாளத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏற ஆண்டு தோறும் ஏராளமான மலையேற்ற வீரர்களும், அவர்களுக்கு உதவியாக உள்ளூர் கைடுகளும் செல்கின்றனர். அப்படி அவர்கள் இந்த சிகரத்திற்கு செல்லும் போது ஆக்ஜிசன் குடுவை, மதுபாட்டில்கள், உணவுப் பொட்டலங்கள், மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணங்கள் என பலவற்றையும் எடுத்துச் செல்கின்றனர்.
கொண்டு போகும் பொருட்களையெல்லாம் பயன்படுத்தி விட்டு சிகரங்களின் வழிகளில் அவற்றை ஆங்காங்கே வீசி விட்டு வந்து விடுகின்றனர். இதனால் எவரெஸ்ட் சிகரத்தில் குப்பைகள் சேர்ந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது.  கூடாரங்கள் அமைக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள், உணவு பொட்டலங்களின் கழிவுகள், பழைய உடைகள் என 25 டன்களுக்கும் மேலாக குப்பைகள் அங்கு குவிந்துள்ளன.  இதனையடுத்து நேபாள ராணுவத்தால் எவரெஸ்ட்டை சுத்தப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. 45 நாட்களில் 10 ஆயிரம் கிலோ குப்பைகளை அகற்ற நேபாள அரசு இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், தற்போது 5 ஆயிரம் கிலோ குப்பைகளை அகற்றியுள்ளதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து