ஆம்புலன்ஸ்க்கு கூட வழிவிடாமல் அட்டுழியம் செய்கிறார்: தினகரனின் பிரசாரத்திற்கு தடை விதிக்க அ.தி.மு.க. மனு

செவ்வாய்க்கிழமை, 14 மே 2019      தமிழகம்
dinakaran 2019 02 07

சென்னை :  ஆம்புலன்ஸ்க்கு கூட வழிவிடாமல் அட்டுழியம் செய்யும் தினகரனின் தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு வழங்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் உள்ளிட்ட அக்க்டசியின் வழக்கறிஞர்கள் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து மனுவொன்றை அளித்தனர். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

விதிகளுக்கு மாறாக...

நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில் நேற்று மாலை, சூலூரில் டிடிவி தினகரன், அவருடைய அணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பேசுகின்றபோது, தினகரன் தேர்தல் விதிகளுக்கு மாறாகவும், தேர்தல் ஆணையம் விதித்துள்ள வழிமுறைகளுக்கு எதிராகவும், முதல்வரையும் துணை முதல்வரையும் தனி நபர் தாக்குதலும், விமர்சனமும் செய்து முதலமைச்சரையும், துணை முதலமைச்சரையும் ஒருமையில் பேசி தன்னுடைய வேட்பாளருக்கு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

தீர்ப்பை விமர்சனம்...

மேலும் நீதிமன்றங்களை விமர்சிக்கின்ற விதமாக உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் தீர்ப்பளித்து முடித்து வைக்கப்பட்ட வழக்குகளை, காவிரி மேலாண்மை வாரிய வழக்கு, சென்னை - சேலம் 8 வழிச் சாலை வழக்குகளை விமர்சிக்கின்ற விதமாகவும், நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு உள்நோக்கம் கற்பிக்கின்ற விதமாகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் தன்னுடைய வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பதாகக் கருதி நீதிமன்றங்களின் தீர்ப்பை விமர்சனம் செய்து பேசியுள்ளார். இது முழுவதுமான தேர்தல் நடத்தை விதிமீறல் மட்டும் அல்லாது, நீதிமன்ற அவமதிப்பாகவும் கருதப்படும்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தற்போது நீதிமன்ற காவலில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் செயலை நியாயப்படுத்தும் விதமாகவும், உச்சநீதிமன்றம் தவறான தண்டனையை சசிகலாவிற்கு வழங்கிவிட்டது என்பதைப் போலவும் ஒரு பொய்யான செய்தியை மக்கள் மத்தியில் பரப்புகின்றார். இது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டிக்க உரிய குற்றமாகும்.

ரத்து செய்ய வேண்டும்....

மேலும், 13ம் தேதி மாலை சூலூர், பிரதான சாலையில் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கும் போது அவ்வழியாக சென்ற மருத்துவ அவசர ஊர்திக்கு வழிவிடாமலும், அதில் உயிருக்கு போராடிக்கொண்டு செல்லும் நோயாளியை கொச்சைப்படுத்தும் விதமாகவும், ஒலிபெருக்கியில் பேசிக்கொண்டே "அதில் ஆள் இருக்கிறார்களா" என்று கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டதோடு மட்டுமல்லாது, சிறிது நேரத்தில் வந்த மற்றொரு மருத்துவ அவசர கால ஊர்திக்கு வழிகொடுக்காமல் அந்த வாகனம் மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அவசர கால ஊர்திக்கு அவசரமாக வழி தர வேண்டும் என்ற அடிப்படை எண்ணம் கூட இல்லாமல் அந்த நோயாளியை கொச்சைப்படுத்தும் விதமாக "வண்டியில் ஆள் இருக்காங்களா பாருங்க" என பேசும் தினகரனின் பிரச்சாரத்திற்கு முக்கிய சாலைகளில் உள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

நடவடிக்கை எடுக்க...

எனவே, தலைமைத் தேர்தல் அதிகாரி தனிநபர் விமர்சனத்தில் தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டும், முதல்வரையும், துணை முதல்வரையும் ஒருமையில் பேசியும், உண்மைக்கு மாறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பியும், நீதிமன்றத் தீர்ப்புகளை தொடர்ந்து விமர்சனம் செய்தும், அவசர கால ஊர்திகளுக்கு வழிவிடாமல் நோயாளிகளை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியும், தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டுக்கொண்டிருக்கும் தினகரன் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படியும், இந்திய தண்டனைச் சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுத்து, அவர் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அ.தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து