நடிகர் சங்க நில முறைகேடு வழக்கு: ராதாரவி, சரத்குமாருக்கு சம்மன்

வெள்ளிக்கிழமை, 17 மே 2019      சினிமா
Sarath - Radha ravi 2019 05 17

சென்னை, நடிகர் சங்க நிலம் முறைகேடு செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கில் வரும் 20-ம் தேதி, நேரில் ஆஜராகுமாறு நடிகர்கள் ராதரவி, சரத்குமார் ஆகியோருக்கு காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

முறைகேடு புகார்

கூடுவாஞ்சேரி அருகே உள்ள வேங்கடமங்கலம் கிராமத்தில், நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக 28 சென்ட் நிலம் இருந்தது. அந்த இடத்தை நடிகர் சங்க செயற்குழு, பொதுக்குழு ஒப்புதல் பெறாமல், முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி, நடேசன், செல்வராஜ் ஆகியோர் மோசடி யாக விற்பனை செய்ததாகவும் இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் நடிகர் சங்க தலைவர் விஷால், காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் கூறினார். கடந்த ஜூன் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

20-ல் ஆஜராக வேண்டும்

இந்த வழக்கில் முறையான விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி, விஷால் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, மேற்கண்ட புகார் குறித்து விசாரணை நடத்தி, 3 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்படி காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நடிகர் விஷாலுக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். விஷால் ஆஜராகவில்லை. ஷூட்டிங் இருப்பதால் வேறொரு நாளில் ஆஜராவதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், வரும் 20-ம் தேதி நடிகர்கள் ராதாரவி, சரத்குமார் ஆகியோர் நேரில் ஆஜராக காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து