பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் உரிமை கோராது: குலாம்நபி ஆசாத் உறுதி

வெள்ளிக்கிழமை, 17 மே 2019      இந்தியா
Gulam-Nabi-Azad 2019 05 17

புது டெல்லி, பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் உரிமை கோராது என்று கூறிய குலாம்நபி ஆசாத், மோடியை அகற்றுவதே இலக்கு எனவும் கூறி உள்ளார்.

சோனியாவுக்கு நிர்பந்தம்

காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுலிடம் ஒப்படைத்த பிறகு தீவிர அரசியல் ஈடுபாடுகளில் இருந்து சோனியா சற்று விலகியே இருந்தார். ஆனால் பா.ஜ.க.வை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க வேண்டுமானால் 2004-ம் ஆண்டு தடாலடியாக சில எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டியது போல இப்போதும் ஒன்று திரட்ட வேண்டிய நிர்ப்பந்தம் சோனியாவுக்கு ஏற்பட்டுள்ளது.  இதை கருத்தில் கொண்டே மாநில கட்சிகளின் தலைவர்களை 23-ம் தேதி டெல்லிக்கு வருமாறு சோனியா அழைத்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாகும் அன்றைய தினம் இரவு தனது வீட்டில் முக்கிய மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் விருந்து கொடுக்க உள்ளார். அவர் விருந்து கொடுக்கும் சமயத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தெரிந்து விடும்.

சோனியாவின் வியூகம்

அந்த தேர்தல் முடிவை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்க சோனியா வியூகம் வகுத்துள்ளார். சோனியாவின் ஒரே குறிக்கோள், காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி கிடைக்காவிட்டாலும் கூட பரவாயில்லை, பா.ஜ.க. ஆட்சி அமைந்து விடக்கூடாது என்பது தான். இதற்காக எந்த தியாகத்தையும் செய்ய அவர் தயாராகியுள்ளார். தேர்தல் முடிவுகளில் இழுபறி ஏற்பட்டால், எதிர்க்கட்சித் தலைவர்களில் யாரை வேண்டுமானாலும் பிரதமராக ஏற்க தயார் என்று சோனியா இறங்கி வந்துள்ளார். இதை அவர் எதிர்க்கட்சி தலைவர்களுடன் போனில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். 23-ம் தேதி மாலை டெல்லிக்கு வந்து விடுமாறும் அவர் மாநில கட்சி தலைவர்களை அழைத்து வருகிறார். தேவைப்பட்டால் 23-ந் தேதி இரவே மாநில கட்சித் தலைவவர்களுடன் சேர்ந்து ஜனாதிபதியை சந்தித்து பேசவும் சோனியா திட்டமிட்டுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஒரு நிமிடத்தை கூட வீணாக்கக் கூடாது என்பதற்காக சோனியா இத்தகைய முயற்சிகளை நேரடியாக மேற்கொண்டுள்ளார். எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் அவரது அதிரடி வியூகத்துக்கு முதல் கட்ட வெற்றி கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

சோனியாவின் இந்த அதிரடி வியூகத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் உறுதிப்படுத்தினார். இது தொடர்பாக அவர் சிம்லாவில் அளித்த பேட்டி வருமாறு:-பாராளுமன்றத் தேர்தலின் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு கட்டத்தில் நாம் இருக்கிறோம். அரசியலில் எனக்கு இருக்கும் அனுபவத்தை அடிப்படையாக வைத்து சொல்கிறேன், நிச்சயமாக பா.ஜ.க. மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது இல்லை. நரேந்திர மோடியால் இரண்டாவது முறையாக பிரதமர் பதவிக்கு வர முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு இந்த தடவை நிச்சயம் கூடுதல் இடங்கள் கிடைக்கும். அதை ஏற்று கருத்து ஒற்றுமை அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி கிடைத்தால் ஏற்றுக்கொள்வோம். கிடைக்காவிட்டாலும் அது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை.

பிரதமர் பதவி யாருக்கு என்பதை பிரச்சினை ஆக்க மாட்டோம். எங்கள் (காங்கிரஸ்) தலைமை இந்த வி‌ஷயத்தில் மிக, மிக தெளிவாக உள்ளது. மாநில கட்சிகளின் தலைவர்கள் தங்களுக்குள் ஒருமித்த கருத்துடன் யாரை பிரதமராக தேர்வு செய்தாலும் அதை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளும். பிரதமர் பதவிக்காக காங்கிரஸ் விடாப்பிடியாக உரிமை கோராது. இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறினார்.

எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு எதிர்க்கட்சிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க காங்கிரசில் தூதர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சந்திரசேகர ராவ், ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் மூவரையும் அழைத்து வரும் பொறுப்பு கமல்நாத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அகமது படேல், குலாம்நபி ஆசாத், ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம் ஆகியோர் மாயாவதி, அகிலேஷ், மம்தாவுடன் பேசி வருகிறார்கள். இதன் மூலம் மாநில கட்சிகள் பா.ஜ.க. பக்கம் போவது தடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து