ஏ.சி. வெடித்ததாக கூறப்பட்ட சம்பவத்தில் திருப்பம்: பெற்றோர், தம்பியை கொலை செய்த மூத்த மகன் மனைவியுடன் கைது

சனிக்கிழமை, 18 மே 2019      தமிழகம்
ACmachine-exploded-killed-3-people 2019 05 18

திண்டிவனம் : திண்டிவனத்தில் ஏ.சி. எந்திரம் வெடித்து 3 பேர் பலியானதாக கூறப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சொத்து பிரச்சினையால் பெற்றோர் மற்றும் தம்பியை கொலை செய்ததாக மூத்த மகன் மனைவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுப்பராயன் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ராஜி. வெல்டிங் பட்டறை உரிமையாளர். இவருடைய மனைவி கலைச்செல்வி. இவர்களுடைய மகன்கள் கோவர்த்தனன், கவுதம். கலைச்செல்வியும், கவுதமும் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வந்தனர்.

கோவர்த்தனனுக்கும், செஞ்சி பகுதியை சேர்ந்த தீபகாயத்திரிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 14-ம் தேதி இரவு கோவர்த்தனனும், தீபகாயத்திரியும் வீட்டில் உள்ள ஒரு அறையிலும், ராஜி தனது மனைவி மற்றும் 2-வது மகனுடன் மற்றொரு அறையிலும் படுத்து உறங்கினர். மறுநாள் அதிகாலையில் கலைச்செல்வியும், கவுதமும் அறையில் உடல் கருகிய நிலையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தனர். ராஜி, வீட்டின் வராண்டா பகுதியில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே ரத்தம் உறைந்து கிடந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் திண்டிவனம் போலீசார் விரைந்து வந்து, 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர்கள் இறந்து கிடந்த வீட்டை பார்வையிட்ட போது, அந்த அறையின் ஏ.சி. எந்திரம் தீயில் கருகிய நிலையிலும், கட்டில், மெத்தைகள் மற்றும் பொருட்கள் எரிந்து சாம்பலாகியும் கிடந்தன. இது தொடர்பாக கோவர்த்தனன் போலீசாரிடம் கூறுகையில், 6 ஆண்டுகளுக்கு முன்பு ஏ.சி. எந்திரம் வாங்கி இருந்ததாகவும், இதுவரை அதை சர்வீஸ் செய்யவில்லை எனவும், இதனால் மின்கசிவு ஏற்பட்டு, ஏ.சி.எந்திரம் வெடித்து தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறி இருந்தார்.

ஆனால் ஏ.சி.எந்திரம் வெடித்ததால் 3 பேர் பலியானதாக கூறப்பட்ட அறையில் கிடந்த 2 மண்எண்ணெய் கேன், ரத்தக்கறை, கழிவறையில் இருந்த வாளியில் பெட்ரோல் வாசனை உள்ளிட்டவை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் ஏ.சி.எந்திரம் வெடித்திருந்தால் முதலில் வெளியே உள்ள அவுட்டோர் முற்றிலுமாக சேதமாகி இருக்கும். ஆனால் இங்கு அப்படி இல்லை. ஏ.சி.எந்திரத்தின் இன்டோர் மட்டுமே எரிந்த நிலையில் இருந்தது.

இது போன்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால் 3 பேரும் கொலை செய்யப்பட்டு, அதன் பிறகு தீ வைத்து எரித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து விசாரணை நடத்த முடிவு செய்தனர். விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரும் நேரில் வந்து விசாரித்தார். திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமையில் இன்ஸ்பெக்டர் சீனிபாபு மற்றும் போலீசார் ராஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது கலைச்செல்வியின் தம்பியான கேணிப்பட்டை சேர்ந்த ஜெயங்சகர் கூறியதாவது:-

ஏ.சி. எந்திரம் வெடித்ததால் எனது அக்காள் உள்பட 3 பேர் பலியானதாக தகவல் வந்ததும் விரைந்து சென்று பார்த்தேன். அப்போது ராஜி மற்றும் கவுதமின் உடலில் வெட்டு காயங்கள் இருந்தன. ஏ.சி. எந்திரம் வெடித்து தீ விபத்து ஏற்பட்டால் வெட்டுக்காயங்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை. 3 பேரையும் வெட்டி கொலை செய்து விட்டு, அதனை மறைப்பதற்காக அறையின் உள்ளேயும், வெளியேயும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது. ஏற்கனவே குடும்பத்தில் சொத்து பிரச்சினை இருந்து வந்தது. ராஜியின் மூத்த மகனான கோவர்த்தனன் மற்றும் சில உறவினர்கள் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே இது தொடர்பாக முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து போலீசார் கோவர்த்தனனை, தங்கள் பிடிக்குள் கொண்டு வந்தனர். திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் தனி அறையில் வைத்து அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து மூத்த மகன் கோவர்த்தன் மனைவியுடன் சேர்ந்து மூன்று பேரையும் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து