8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடக்கிறது: பாராளுமன்றத்திற்கு இன்று கடைசிக் கட்ட தேர்தல் - நாடு முழுவதும் 23-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை

சனிக்கிழமை, 18 மே 2019      இந்தியா
Parliamentary election announce 2019 03 07

 புதுடெல்லி : பாராளுமன்றத்துக்கு இறுதிக் கட்டமாக 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் 23-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

கடைசி கட்டமாக...

பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியிட்டது. அதன்படி கடந்த மாதம் 11-ம் தேதி 91 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடந்தது.

18-ம் தேதி 96 தொகுதிகளுக்கும், 23-ம்  தேதி 115 தொகுதிகளுக்கும், 29-ம் தேதி 71 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த 6-ம் தேதி 51 தொகுதிகளுக்கும், 12-ம்  தேதி 6-வது கட்டமாக 59 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இறுதிக் கட்டமாக 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து உள்ளது.

59 தொகுதிகளில்...

பீகார் (8), ஜார்க்கண்ட் (3), மத்திய பிரதேசம் (8), பஞ்சாப் (13), மேற்குவங்காளம் (9), சண்டிகர் (1), உத்தரபிரதேசம் (13), இமாச்சலபிரதேசம் (4) ஆகிய மாநிலங்களில் இந்த 59 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த மாதம் 30-ம் தேதி இந்த 59 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டது.  கடந்த 2 வாரங்களாக இந்த 59 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வந்தது. பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகள் 8 மாநிலங்களிலும் ரோடு ஷோ நடத்தி ஆதரவு திரட்டினார்கள். அதுபோல காங்கிரஸ் தலைவர் ராகுல், பிரியங்கா ஆகியோரும் அதிரடி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பிரசாரம் நிறைவு...

இதற்கிடையே மாநில கட்சிகளின் தலைவர்களான மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோரும் இறுதி கட்ட பிரசாரத்தை மேற்கொண்டனர். மேற்கு வங்காளத்தில் கலவரம் ஏற்பட்டதால் அங்குள்ள 9 தொகுதிகளிலும் கடந்த 16-ம் தேதியே பிரசாரம் ஓய்ந்தது. மற்ற 50 தொகுதிகளில் நேற்று முன்தினம் மாலையுடன் பிரசாரம் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் கடந்த 2 மாதமாக பரபரப்பாக நடந்து வந்த தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றுள்ளது.

பலத்த பாதுகாப்பு...

இன்று  (ஞாற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. இதற்காக 59 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதட்டமான தொகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் 6 கட்ட தேர்தல் மூலம் 483 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. இன்று 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும் 542 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவு பெறும். பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள வேலூர் தொகுதிக்கு மட்டும் பின்னர் தேர்தல் நடைபெறும்.

918 வேட்பாளர்கள்...

இன்று நடக்கும் தேர்தலில் சுமார் 10 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 59 தொகுதிகளிலும் 1 லட்சத்து 12 ஆயிரத்து 986 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 59 தொகுதிகளில் மொத்தம் 918 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று சத்ருகன்சின்கா, ரவிசங்கர்பிரசாத், நிஷா பாரதி, பவன்குமார் பன்சால், சன்னி தியோல் ஆகியோர் தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. ஆகவே, இந்த தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்துக்கு கூடுதல் பாதுகாப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில்...

அதேபோல் தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது. ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும், கடந்த மாதம் 18-ம் தேதி நடந்த மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலின்போது மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்ட 13 வாக்குச்சாவடிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

23-ம் தேதி முடிவு...

இன்று நடைபெற உள்ள இறுதிகட்ட வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். பார்லி. இறுதிக்கட்ட தேர்தல் மற்றும் தமிழகத்தில் நடைபெறும் 4 தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பிறகு 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் வெளியாகவுள்ளன.

 

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து