முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் வைகாசி திருவிழாவில் நாடு வளம் பெற வேண்டி முளைப்பாரி ஊர்வலம்: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு:

திங்கட்கிழமை, 20 மே 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- திருமங்கலம் ஸ்ரீபத்திரகாளி மாரியம்மன் திருக்கோவில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழச்சியாக நாடு வளம் பெற்றிட வேண்டி நடைபெற்ற மாபெரும் முளைப்பாரி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
திருமங்கலம் பாண்டியகுல சத்திரிய நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீபத்திரகாளி மாரியம்மன் திருக்கோவிலில் வைகாசி திருவிழா தற்போது  சிறப்பாக நடைபெற்று வருகிறது.புகழ்பெற்ற இந்த வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாடு வளம் பெற்று திகழந்திட வேண்டியும்,நாட்டு மக்கள் நலம் பெற்று வாழ்ந்திட வேண்டியும் முளைப்பாரி ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.இதற்காக விரதம் இருந்த உறவின்முறையார் தங்களது வீடுகளின் இருட்டறையில் மிகவும் நேர்த்தியுடன் முளைப்பாரி வளர்த்தார்கள். பின்னர் இதனை திருவிழாவின் 9ம் நாளான நேற்று மாலை அருள்ளமிகு ஸ்ரீபத்திரகாளி மாரியம்மன் கோவிலின் வளாகத்திற்கு கொண்டு வந்து வைத்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து வழிபட்டனர். பின்னர் அதிர்வெடிகள் முழங்கிட அலங்கரிக்கப்பட்ட யானை முன்னே சென்றிட முளைப்பாரி ஊர்வலம் கோவிலிலிருந்து புறப்பட்டது.
நகரின் முக்கிய வீதிகளான பெரியகடைவீதி,உசிலை சாலை வழியே மேள,தாளங்கள் முழங்கிட சென்ற முளைப்பாரி ஊர்வலத்தில் பெண்கள்,குழந்தைகள் முளைப்பாரி சுமந்தும் குலவையிட்டபடியும் சென்றனர்.பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த முளைப்பாரி ஊர்வலம் திருமங்கலம் பி.ஆர்.சி.பணிமனை முன்பு இருக்கும் குண்டாற்று பகுதியில் நிறைவடைந்ததை தொடர்ந்து முளைப்பாரி அனைத்தும் குண்டாற்றில் கரைக்கப்பட்டது. இதனால் நாடு செழித்து நாட்டு மக்கள் அனைவரும் நலம் பெற்று திகழந்திடுவர் என்பது முளைப்பாரி ஊர்வலத்தின் ஐதீகமாகும்.இதில் திருமங்கலம் பாண்டிகுல சத்திரிய நாடார்கள் உறவின்முறை டிரஸ்டி,நாட்டாண்மைகள்,கோவில் நிர்வாகிகள், காரியகாரர்கள், வித்யாசாலா கமிட்டி நிர்வாகிகள்,பள்ளி கமிட்டி நிர்வாகிகள்  மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து