திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தேவகவுடா சாமி தரிசனம்

செவ்வாய்க்கிழமை, 21 மே 2019      தமிழகம்
Deve-Gowda-Srirangam 2019 05 21

திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவிலில் கர்நாடக முன்னாள் பிரதமர் தேவகவுடா சுவாமி தரிசனம் செய்தார். அவரது வருகையையொட்டி கோவிலில் கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.  

கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா  நேற்று காலை மன்னார்குடி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர்  அவர் திருச்சி ஸ்ரீரங்கம் வந்து ரெங்கநாத சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் அவரது மகன் ரேவண்ணாவும் வந்திருந்தார். அவர்களை கோவில் தலைமை பட்டரான சுந்தர் பட்டர் மற்றும் கோவில் நிர்வாக அதிகாரிகள் வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து கருடாழ்வார், மூலவர், தாயார், சக்கரத்தாழ்வார் சன்னதிகளில் தேவகவுடா சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

சுமார் ஒரு மணி நேரம் கோவிலில் இருந்த அவர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தேவகவுடா வருகையையொட்டி கோவிலில் கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.

பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்து, நாளை   23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் முக்கிய தலைவர்கள் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஸ்ரீரங்கம் கோவிலில் வழிபாடு நடத்தி விட்டு சென்றார். இதே போல் டி.டி.வி.தினகரன் ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் கோவிலில் வழிபாடு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து