வடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை - ஆதாரமில்லாத குற்றச்சாட்டை நம்ப வேண்டாம்: தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 21 மே 2019      இந்தியா
election commission 2019 03 03

புது டெல்லி : வாக்கு எந்திரங்கள் மாற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதை அடுத்து, ஆதாரமில்லாத குற்றச்சாட்டை நம்ப வேண்டாம் என தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.

வட மாநிலங்களில்...

வட மாநிலங்களில் உள்ள பல தொகுதிகளில் மின்னணு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக நேற்று முன்தினம் முதல் சமூக வலைதளங்களில் பரபரப்பாக தகவல்கள் பரவின. குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் இந்த தகவல் அதிகளவில் பரவி உள்ளது. அந்த சமூக வலைதள தகவல்களில் மின்னணு எந்திரங்களை ஒட்டு மொத்தமாக மாற்றவும் சில இடங்களில் மின்னணு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்யவும் முயற்சி நடப்பதாக படங்களுடன் தகவல்கள் பரவியது. இதனால் எதிர்க்கட்சியினர் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்...

உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள காசிப்பூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் மனோஜ்சின்கா, பகுஜன் சமாஜ் சார்பில் அப்சல் அன்சாரி போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியில் பதிவான வாக்குகளை கொண்ட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த அறைக்குள் நேற்று முன்தினம் இரவு சிலர் செல்ல முயன்றனர். அவர்கள் அங்கிருந்த மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை ஒரு வாகனத்தில் ஏற்றி செல்ல முயன்றதாக தகவல் பரவியது. இதையடுத்து ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறை முன்பு அன்சாரியும் அவரது ஆதரவாளர்களும் திரண்டு வந்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் காசிப்பூர் தொகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

ஆணையம் மறுப்பு...

இதற்கிடையே உத்தர பிரதேச மாநிலம் சந்தவுலி தொகுதியிலும் ஓட்டுப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக தகவல் பரவியது. இந்த தொகுதிக்குரிய மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்துக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு லாரியில் ஏராளமான எந்திரங்கள் கொண்டு வந்து இறக்கப்பட்டன. ஓட்டுப்பதிவு நிறைவு பெற்று 2 நாட்களுக்கு பிறகு லாரியில் இருந்து புதிதாக மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்கள் இறக்கப்பட்டதால் அந்த தொகுதி சமாஜ்வாடி தொண்டர்களுக்கு சந்தேகம் எழுந்தது. அவர்கள் அதை வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். சந்தவுலி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரை வெற்றி பெற செய்வதற்காக திட்டமிட்டு ஓட்டுப்பதிவு எந்திரங்களை மாற்றுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டது. ஆனால் இதை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

அதிகாரி விளக்கம்...

இது தொடர்பாக தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், சந்தவுலி தொகுதியில் 35 மின்னணு எந்திரங்கள் முன் எச்சரிக்கையாக வைக்கப்பட்டு இருந்தன. ஏதாவது வாக்குச்சாவடியில் எந்திரங்கள் பழுதானால் அங்கு பயன்படுத்துவதற்காக இந்த 35 வாக்குப்பதிவு இயந்திரங்களும் கையிருப்பு வைக்கப்பட்டு இருந்தன. அந்த 35 எந்திரங்களைதான் நாங்கள் லாரியில் இருந்து எடுத்து வந்து இறக்கி வைத்தோம் என்று விளக்கம் அளித்துள்ளார். ஆனால் இதை சமாஜ்வாடி தொண்டர்கள் ஏற்க மறுத்து போராட்டம் நடத்தினர்.

சமாஜ்வாடி புகார்...

உத்தரபிரதேசத்தில் டுமரியாகஞ்ச் தொகுதியிலும் மினி லாரி மூலம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வந்து மாற்றம் செய்யப்பட்டதாக பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த தொகுதியில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தது. போராட்டங்கள் வலுத்ததால் மினி லாரியில் கொண்டு வரப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து எடுத்து வேறு பகுதிக்கு கொண்டு சென்றனர்.

பீகாரில் போராட்டம்...

ஜான்சி தொகுதியிலும் ஓட்டுப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சி நடந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. பஞ்சாப், அரியானா, பீகார் மாநிலங்களிலும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பீகாரில் மகாராஜ் கஞ்ச், சரண் தொகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களுடன் லாரிகள் சுற்றி வருவதை லாலு பிரசாத் கட்சி தொண்டர்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதனால் பீகாரிலும் பல இடங்களில் நேற்று போராட்டம் நடைபெற்றது. வட மாநிலங்களில் சுமார் 20 தொகுதிகளில் மின்னணு எந்திரங்களை மாற்ற முயற்சி நடந்ததாக எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆதாரம் இல்லை....

எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுகளை தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிரடியாக மறுத்துள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

உத்தரபிரதேசத்தில் சில தொகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மாற்றப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி உள்ள தகவல்களில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. தேவையில்லாமல் வதந்தியை பரப்பும் வகையில் இதை யாரோ செய்துள்ளனர். திட்டமிட்டு இத்தகைய சதியில் யாரோ ஈடுபட்டுள்ளனர். எந்த ஒரு தொகுதி வாக்குகளும் தில்லுமுல்லு செய்து மாற்றப்படவில்லை. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் உரிய முறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த எந்திரங்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கின்றன.

கண்காணிப்பு...

நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்களும், ஒப்புகை சீட்டு எந்திரங்களும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் முன்னிலையில்தான் சீல் வைத்து மூடப்பட்டன. அப்படி சீல் வைக்கப்பட்டது முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு படையினர் ஒவ்வொரு ஓட்டு எண்ணும் மையம் முன்பும் நிறுத்தப்பட்டுள்ளனர். இத்தகைய பலத்த பாதுகாப்பை மீறி யாரும் உள்ளே சென்று விட முடியாது.

நம்ப வேண்டாம்...

தேர்தல் ஆணையம் செய்துள்ள பாதுகாப்பை தவிர வேட்பாளர்களும் தங்களது முகவர்கள் மூலம் மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை முன்பு பாதுகாப்பில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் 24 மணி நேரமும் அங்குதான் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் மீறி எப்படி மின்னணு எந்திரங்களை கடத்தி சென்று விட முடியும். எனவே அடிப்படை ஆதாரமே இல்லாத இத்தகைய குற்றச்சாட்டுகளை யாரும் நம்ப வேண்டாம்.

வதந்தியை பரப்பி...

உத்தரபிரதேசத்தில் சில தொகுதிகளில் பயன்படுத்தாத அதாவது கையிருப்பு வைக்கப்பட்டு இருந்த மின்னணு எந்திரங்களை கொண்டு சென்ற போது தான் அதுபற்றி தெரியாமல் வதந்தியை பரப்பி விட்டனர். அத்தகைய இடங்களில் மின்னணு எந்திரம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதை அனைத்துக் கட்சியினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனால் பிரச்சினை தீர்ந்துள்ளது. பயன்படாத மின்னணு எந்திரங்களை கொண்டு செல்வது தொடர்பாக இப்போது நாங்கள் உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம். ஜான்சி தொகுதியிலும் பயன்படாத மின்னணு இயந்திரங்களை கொண்டு சென்றதால்தான் கட்சி தொண்டர்கள் சந்தேகத்தில் வதந்தியை பரப்பி விட்டனர். தற்போது அங்கும் உரிய விளக்கம் அளித்த பிறகு பிரச்சினை தீர்ந்துள்ளது.  இவ்வாறு அந்த தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்தார்.

 

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து