தில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள்! வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை

செவ்வாய்க்கிழமை, 21 மே 2019      தமிழகம்
EPS-OPS 2019 05 20

சென்னை : தில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் என்றும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் என்றும் அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், நாளை காலை 6 மணிக்கே வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு செல்ல வேண்டும் என்று அ.தி.மு.க.வினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உறுதி செய்ய வேண்டும்....

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம், முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

அ.தி.மு.க. வாக்கு எண்ணிக்கை முகவர்களின் கவனத்திற்கு, வாக்கு எண்ணிக்கையின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் : நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில் நாளை வாக்கு எண்ணும் பணிக்கு முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அ.தி.மு.க.வினர் மிகவும் கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்றி வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் பெற்று கழகத்திற்கு அர்ப்பணிக்கும் வகையில் பின்வரும் அம்சங்களை நினைவில் கொண்டு பணியாற்றுங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான நாளை அ.தி.மு.க. சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் உங்களுடைய மையங்களுக்கு காலை 6 மணிக்கே சென்று விட வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் அனைத்தும் முறைப்படி செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

சரி பார்க்க வேண்டும்...

வாக்குப் பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பதிவான வாக்குகளும், எண்ணிக்கையில் காட்டப்படும் வாக்குகளும் ஒரே எண்ணிக்கையில் உள்ளனவா என்பதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடியும் போதும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் எத்தனை வாக்குகள் கிடைத்துள்ளன என்பதை எழுதி வைத்துக் கொண்டு, அதை தேர்தல் அதிகாரியிடம் சரி பார்க்க வேண்டும். அதன் பின்னர் தான் அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் யாரேனும் மாற்றுக் கட்சியினருக்கு ஆதரவாகவும், முறைகேடாகவும் செயல்படுகிறார்களா என்பதை தீவிரமாக கண்காணித்து, குறைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட மேலதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உரிய தீர்வினை காண வேண்டும்.

விழிப்போடு கண்காணித்து...

தி.மு.க.வினர் தில்லுமுல்லு செய்வதிலும், வன்முறையில் ஈடுபடுவதிலும் கைதேர்ந்தவர்கள் என்பதை இந்த நாடே நன்கு அறியும். இதற்கு பல்வேறு உதாரணங்களைச் சொல்லலாம். ஆகவே, வாக்கு எண்ணும் மையங்களில் தி.மு.க.வினரால் தில்லுமுல்லு ஏதேனும் நடத்தப்படுகிறதா என்பதை விழிப்போடு கண்காணித்து, அது சம்பந்தமாக மேலதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உரிய தீர்வு காண வேண்டும். அ.தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகளின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் உங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்து முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் தான் அங்கிருந்து வெளியில் வர வேண்டும்.

விழிப்புடன் இருக்க...

அ.தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள, முகவர்களும் தங்களுக்கான வாக்கு எண்ணும் மையங்களில், வாக்கு எண்ணும் பணி முறையாக நடைபெறுகின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும். அ.தி.மு.க. வெற்றியை உறுதி செய்யும் வகையிலும், மக்கள் தீர்ப்பு நிலை நாட்டப்படும் வகையிலும், அனைவரும் விழிப்புடன் இருந்து பணியாற்றுங்கள். இது, ஜனநாயக பயிர் தழைத்தோங்க நாம் ஆற்ற வேண்டிய இன்றியமையாத கடமை என்பதை நினைவில் கொண்டு பணியாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.  இவ்வாறு அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து