சொத்து குவிப்பு வழக்கு: முலாயம் சிங், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்

செவ்வாய்க்கிழமை, 21 மே 2019      இந்தியா
CBI

புது டெல்லி, சொத்து குவிப்பு வழக்கில் சமாஜ்வாடி தலைவர்கள் முலாயம் சிங், அகிலேஷ் ஆகியோருக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை என சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்துள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஸ்வநாத் சதுர்வேதி என்பவர், 2005-ல் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், சமாஜ்வாடி தலைவர்கள் முலாயம் சிங், அகிலேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், வருமானத்துக்கு அதிகமாக, சொத்து குவித்து உள்ளனர். இது குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இந்த குற்றச்சாட்டு உண்மையா என்பது குறித்து விசாரிக்கும்படி, 2007-ல், சி.பி.ஐ.,க்கு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முலாயம் தரப்பில், 2012-ல் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. மேலும், விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கு முலாயம் சிங் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தங்கள் குடும்பத்தினர் மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்த பதில் மனுவில், முலாயம் சிங், அகிலேஷ் ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் ஆதாரம் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து