முதல் முறையாக 2 இந்தியர்களுக்கு 10 ஆண்டு விசா வழங்கிய ஐக்கிய அரபு

வியாழக்கிழமை, 23 மே 2019      உலகம்
United Arab visa 2019 05 23

துபாய், ஐக்கிய அரபு அமீரகம் அறமுகப்படுத்தியுள்ள 10 ஆண்டுகளுக்கான சிறப்பு நுழைவு இசைவு (விசா), இந்தியாவைச் சேர்ந்த இருவருக்கு முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளைச் சேர்ந்த திறமை வாய்ந்த மாணவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களையும், தொழிலதிபர்களின் முதலீடுகளையும் கவரும் வகையில், தங்கள் நாட்டில் 10 ஆண்டு காலம் தங்கியிருப்பதற்கான புதிய விசா முறையை ஐக்கிய அரபு அமீரகம் கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது.

எனினும், அந்த திட்டத்தின்படி அரபு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், மருத்துவத் துறை நிபுணர்களுக்கு மட்டுமே இதுவரை விசாக்கள் வழங்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த இரு தொழிலதிபர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் 10 ஆண்டு கால விசா தற்போது வழங்கப்பட்டுள்ளது. ரீகல் குழும நிறுவனங்களின் தலைவர் வாசு ஷெராப், குஷி குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் குஷி கட்வானி ஆகிய அந்த இருவரும்தான் நீண்ட கால விசா பெறும் முதல் இந்தியர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலீடுகளையும், திறமைசாலிகளையும் கவரும் வகையில் தங்கள் நாட்டில் நிரந்தர குடியுரிமை வழங்கும் தங்க அட்டை திட்டத்தை ஐக்கிய அரபு அமீரகம் அறிமுகம் செய்துள்ள நிலையில், நீண்ட கால விசா திட்டத்தின்கீழ் இரு இந்தியர்கள் அழைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து