மீண்டும் பிரதமராக பதவியேற்கும் நரேந்திரமோடிக்கு முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ். வாழ்த்து

வியாழக்கிழமை, 23 மே 2019      தமிழகம்
EPS-OPS 2019 05 20

சென்னை : மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வாழ்த்துக் கடிதம்

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

2019 பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை முன்னிட்டு,முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தின் விவரம் பின்வருமாறு:-

நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் உங்களுடைய அற்புதமான வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறேன். எங்கள் நாட்டு மக்கள் உங்களை பெருமைப்படுத்தி இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள். உங்களுடைய தலை சிறந்த தலைமையில் இந்திய அரசு நடைபோட என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர்அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

துணை முதல்வர்...

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடிக்கு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் உங்களுடைய கடும் உழைப்பினால் பா.ஜ. வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை மீண்டும் பெற்றிருக்கிறது. உங்கள் கட்சி நாட்டு மக்கள் இதயங்களை வென்றுவிட்டது. வலிமையான ஒற்றுமையான நாட்டை உங்கள் தலைமையில் உருவாக்க வாழ்த்துக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதே போல் காந்திநகர் தொகுதியில் வெற்றி பெற்ற பா.ஜ. தலைவர் அமித் ஷாவுக்கும் அவர் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராமதாஸ்...

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில்:-

2014-ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக தாங்கள் பதவியேற்ற போது, ‘இந்தியாவிலுள்ள ஒவ்வொருவரின் முன்னேற்றத்திற்காக உங்கள் ஒவ்வொருவருடனும் எப்போதும் இருப்பேன்” என்று உறுதியளித்து இருந்தீர்கள். அந்த வாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனாகவே இப்போது இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக தங்களை நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மக்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். உங்கள் தலைமையில் வளமான, வலிமையான நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று நம்புகிறேன். இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் அனைத்து முயற்சிகளிலும் நீங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த வாழ்த்துச்செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து