மதச்சார்பின்மை முகமூடியை அணிந்து நாட்டை யாரும் இனி ஏமாற்ற முடியாது: தொண்டர்களிடையே பிரதமர் மோடி பேச்சு

வெள்ளிக்கிழமை, 24 மே 2019      இந்தியா
modi1 2019 05 23

புது டெல்லி, மதச்சார்பின்மை என்ற முகமூடியை அணிந்து கொண்டு நாட்டை இனி யாரும் ஏமாற்ற முடியாது என்றும்  இந்த வெற்றியை நாட்டு மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்றும் பிரதமர் மோடி தொண்டர்களிடையே பேசினார்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் முன்னிலை பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைக்க உள்ளது. தேர்தல் வெற்றியை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, கட்சி தலைவர் அமித்ஷா ஆகியோர் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்களுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரும், கட்சி நிர்வாகிகளும் திணறினர். அப்போது தொண்டர்களிடையே பிரதமர் மோடி பேசியதாவது:-

பா.ஜ.க.வின் வெற்றி மோடிக்கானது அல்ல. இந்தியாவுக்கானது. மீண்டும் எங்களை அரியணையில் ஏற்றிய 125 கோடி மக்களுக்கு தலைவணங்கி நன்றியை தெரிவித்து கொள்கிறேன். புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற எங்களின் வேண்டுகோளை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக மதச்சார்பின்மை விமர்சனம் செய்யப்பட்டு வந்தது. போலி மதசார்பற்றவர்கள் நாட்டை தவறாக வழிநடத்தி வந்தனர். மதச்சார்பின்மை என்ற முகமூடியை அணிந்து கொண்டு நாட்டை இனி யாரும் ஏமாற்ற முடியாது. மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும் போது அரசின் கடமையும் அதிகரிக்கிறது.

உலக ஜனநாயகத்தில் இந்த வெற்றி முக்கியமானது. நாடு விடுதலை அடைந்த பிறகு மக்கள் அளித்த மிக தீர்க்கமான முடிவு இது. அதுவும் 42 டிகிரி செல்சியஸ் கோடை வெயிலில் தீர்மானம் எடுத்து மக்கள் வாக்களித்து உள்ளனர். எனவே நாங்களும், எங்கள் கூட்டணியும் வெற்றியை நாட்டு மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து