குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் எடப்பாடி உத்தரவு

புதன்கிழமை, 29 மே 2019      தமிழகம்
CM water 2019 05 29

சென்னை, தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு  முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் ஆலோசனை...

தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்ப்பது குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆண்டு பருவமழை பொய்த்தது. தமிழகத்துக்கு அதிக பலன் தரும் வடகிழக்கு பருவமழை சீசனில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதன் காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு காணப்படுகிறது. மழை பெய்யாததால் ஏரிகள், குளங்கள் வறண்டு போய் உள்ளன. நிலத்தடி நீரும் குறைந்துள்ளது. அணைகளிலும் போதிய அளவு தண்ணீர் இல்லை. இருந்த போதிலும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. முன்எச்சரிக்கையாக மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

அரசு தீவிர கவனம்....

இந்த நிலையில் தான் மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்தன. இதுசுமார் ஒரு மாத காலத்திற்கு மேல் நீடித்தது. இந்த நிலையில் கடந்த 27-ம் தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தன. இதையடுத்து தமிழக அரசு, அரசு பணிகளில் தீவிரம் காட்ட துவங்கியது. குறிப்பாக தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம்
நடைபெற்றது.

முதல்வர் உத்தரவு...

இந்த கூட்டத்தில் தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. எந்தெந்த திட்டங்களை செயல்படுத்தி தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண முடியும் என்று விவாதிக்கப்பட்டது. அப்போது தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

அமைச்சர்கள்...

இந்த கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயகுமார், கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் க.சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, கூடுதல் தலைமை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் கொ.சத்யகோபால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து