ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் வீரராகவராவ் திடீர் ஆய்வு

வியாழக்கிழமை, 30 மே 2019      ராமநாதபுரம்
30 rmd collecter

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் வீரராகவராவ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
 ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்திடும் வகையில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் மருத்துவமனையிலுள்ள அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நிலைப்படுத்துதல் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, தீவிர இருதய நோய் சிகிச்சை பிரிவு, மருந்து சேமிப்புக் கிடங்கு, ஆண்கள், பெண்கள் அறுவை சிகிச்சை பிரிவு, ஆய்வகம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் நேரிடையாகச் சென்று ஆய்வு செய்தார். இதன்பின்னர் அவர் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தினந்தோறும் சராசரியாக, 450 நபர்கள் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர்.  ஏறத்தாழ 650 படுக்கைகள் வசதியும் உள்ளது.  இந்நிலையில், இம்மருத்துவமனையில் வழங்கப்படும் மருத்துவ சேவை தரத்தினை மேம்படுத்திடும் நோக்கில் இன்றைய தினம் ஆய்வு செய்யப்பட்டது.  குறிப்பாக, மருத்துவர்களின் வருகைப்பதிவேடு, சிகிச்சைக்காக வருவோரின் விபரப் பதிவேடு, குழந்தை சிகிச்சை பிரிவில் உள்ள குழந்தைகளின் விபரப் பதிவேடு ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.  இத்தகைய பதிவேடுகளை ஆய்வு செய்த போது சில விபரங்கள் முழுமையின்றி இருந்த நிலையில் அது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், பதிவேடுகளில் முறையான தகவல்களை முழுமையாக பதிவு செய்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 இதுதவிர, மருத்துவமனையிலுள்ள படுக்கைகளின் எண்ணிக்கை, தரம், கழிப்பறை வசதி மற்றும் பராமரிப்பு ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.   பொதுவாக ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணி நேரத்தில் மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை என அவ்வப்போது புகார்கள் வருகின்றன.   இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக மருத்துவர்களின் வருகையினை பதிவு செய்திட ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயோ மெட்ரிக் முறையில் தீவிரமாக கண்காணித்திட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
இம்மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிறப்பாக பணியாற்றி தரமான மருத்துவ சேவையினை வழங்கி வருகின்றார்கள்.  இருப்பினும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நபர்களை பிற தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல சிலர் அறிவுறுத்துவதாகவும் புகார்கள் வருகின்றன.  இது தொடர்பாக முறையாக கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள இணை இயக்குநர் மருத்துவப் பணிகள் மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது, இணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (பொ) மரு.ஏ.சகாயஸ்டீபன்ராஜ், துணை இயக்குநர் (காசநோய்) மரு.சாதிக்அலி, மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.பி.கே.ஜவஹர்லால் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து