தமிழகத்தில் ஆகஸ்ட் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு - தேர்தல் ஆணையம் தகவல்

வியாழக்கிழமை, 30 மே 2019      தமிழகம்
tamilnadu-state-election-commission 2019 02 27

சென்னை : தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கூடுதல் அவகாசம்....

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி வக்கீல் சி.ஆர். ஜெயசுகின் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி விசாரணைக்கு வந்த போது 4 வாரம் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மதன் பி.லோகூர், தீபக் குப்தா, ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் சி.ஆர்.ஜெயசுகின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  4-ம் தேதி முறையிட்டார். அப்போது அவரது கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

பிரமாணப் பத்திரம்...

இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் பதிவாளர் முன் கடந்த ஜனவரி 21-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் பி. வினோத் கண்ணா, கூடுதல் அவகாசம் கோரினார். அதற்கு மனுதாரர் ஜெய்சுகின் ஆட்சேபம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, 4 வாரம் கூடுதல் அவகாசம் வழங்கிய பதிவாளர், இனி அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்றும், வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்தார். மேலும் கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

நடத்த முடியாது...

இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் கடந்த 4-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், உள்ளாட்சி தேர்தல் நடத்தும் முன்பாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு அது தொடர்பான விவரங்களை மாநில தேர்தல் ஆணையம் மாநில அரசிடம் சமர்பிக்கவில்லை. அதனால், உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது. கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும். மேலும், தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான சூழலும் இல்லை. எனினும் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

ஜூலை 2-வது வாரத்தில்...

இதற்கிடையே, கடந்த 5-ம் தேதி சேலத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயார் என்றும், 3 மாதத்தில் நிச்சயமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.  இந்நிலையில், தமிழகத்தில் ஆகஸ்ட் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் ஜூலை 2-வது வாரத்தில் முடிய வாய்ப்பு உள்ளதாகவும் தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து