காரில் சென்ற போது முழக்கமிட்ட பா.ஜ.க.வினரை கண்டித்த மம்தா

வெள்ளிக்கிழமை, 31 மே 2019      இந்தியா
mamata-banerjee 2019 05 26

கொல்கத்தா, மேற்குவங்க முதல்வர் மம்தா காரில் சென்ற போது, கொல்கத்தாவில் அவருக்கு எதிராக பா.ஜ.க.வினர் முழக்கமிட்டனர். காரில் இருந்து இறங்கிய மம்தா, தமக்கு எதிராக முழக்கமிட்டவர்களை கண்டித்தார்.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றி அலையால் மம்தாவின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கம் ஆட்டம் கண்டுள்ளது. தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களை பெற்ற நிலையில், பா.ஜ.க. 18 இடங்களை பிடித்தது. இது மம்தாவிற்கு பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கொல்கத்தாவில் இருந்து நைஹாத்தி என்ற பகுதிக்கு முதல்வர் மம்தா காரில் சென்று கொண்டிருந்தார்.

பதபாரா என்ற பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் நின்றிருந்த சிலர், மம்தாவை நோக்கி ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த மம்தா, காரில் இருந்து கீழே இறங்கி, கோஷங்களை எழுப்பியவர்களுடன் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பா.ஜ.க.வினர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, அவர்கள் அனைவரும் வெளியே இருந்து வந்தவர்கள் என்றும், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் கிடையாது என்றும் தெரிவித்தார். தம்மை துன்புறுத்த அவர்களுக்கு எவ்வளவு தைரியம் என கேள்வி எழுப்பிய மம்தா, இதை ஏற்க முடியாது என கூறினார். மேலும், தமக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் யார், யார் என்று தகவல் அனுப்புமாறு காவல் அதிகாரிகளுக்கு மம்தா உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து