முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எழும்பூர் அரசு குழந்தைகள் நலமருத்துவமனையில் காற்றழுத்த குழாய் வழி அதிநவீன ஆய்வக சேவை: அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 31 மே 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், காற்றழுத்த குழாய் வழி அதிநவீன ஆய்வக சேவை மற்றும் அல்ட்ரா சோனாகிராம் அறை ஆகியவற்றை மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

3 பிரிவுகளாக...

இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில்.,
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் பணிபுரிபவர்களின் இக்காப்பகம் வயதிற்கேற்ப 3 பிரிவுகளாக உருவாக்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தை முதல் 1 வயது வரை பாதுகாப்பான தொட்டில் படுக்கை வசதி, திட்டத்தின் அடைப்படை நோக்கமான பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவும் வகையில் சிறப்பு வசதி, 1 வயது முதல் 5 வயது வரை குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தேவையான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
 
பல்வேறு வசதிகள்...

5 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு டேபிள் டென்னிஸ், கேரம், செஸ் போன்ற விளையாட்டுகளுக்கான நவீன விளையாட்டு மையம், படிப்பதற்கும், வீட்டுபாடங்கள் செய்வதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தன்னார்வ அமைப்பின் மூலம் ஓவியக் கலைஞர்கள் குழந்தைகளை கவரக்கூடிய வகையில் ஓவியங்களை வரைந்துள்ளனர். இந்த மையத்தில் வர்ணங்கள் காற்று மாசு இல்லாதவாறும், குழந்தைகளுக்கு தொற்று ஏற்படாதவாறும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

உடனடி சிகிச்சை...

இதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் முதன் முறையாக உலக தரத்தில் ரத்தம் உள்ளிட்ட பரிசோதனை மாதிரிகளை மனித தொடர்பே இல்லாமல் முழுமையாக தானியங்கி முறையில் & அவசர சிகிச்சை பிரிவிலிருந்து அதிநவீன காற்றழுத்த குழாய்கள் மூலமாக ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம் பரிசோதனை முடிவுகள் துரிதமாகவும், துல்லியமாகவும் பெறப்படுவதால் குழந்தைகளுக்கு உடனடி சிகிச்சை கிடைக்க ஏதுவாக அமைகிறது.

புதிய முயற்சி...

மேலும், நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக நடனம், இசை, நாடகம் போன்றவை நடத்தப்படுகின்றது. புற்றுநோய் சிகிச்சை மேற்கொள்ளும் குழந்தைகள் அதிக நேரத்தினை மருத்துவமனையில் செலவழிப்பதனால் அவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை நடத்தப்படும். சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளை மகிழ்விப்பவர் எனும் புதிய முயற்சியை செய்து வருகிறது. இதன் மூலம் குழந்தைகளுக்கு எண்டோஸ்கோப்பி சிகிச்சையின் போது உதவுதல், ஸ்கேன் பரிசோதனையின்போது குழந்தையினை சாந்தப்படுத்துதல் போன்றவற்றில் பயன்படுத்தப்படுவார்கள் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறைச் செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின்ஜோ, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி, அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் அரசர் சீராளர், நேரோலேக் பெயிண்ட் லிமிட்டடின் இயக்குநர் (நிதி) பிரசாந் பாய் மற்றும் நிர்வாகிகள், தன்னர்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து