முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக அதிகரிப்பு: அரசின் திட்டங்களால் பயன்பெற ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்வு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்பு

சனிக்கிழமை, 1 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்படும் சில திட்டங்களின் கீழ் விண்ணப்பிப்பவர்களின் ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மகளிர் நலத் திட்டங்கள்....

தமிழ் நாடு அரசின் வளர்ச்சி திட்டங்களில் மகளிர் நலம் முக்கியமான ஒன்றாகும். பெண் குழந்தைகள், மகளிர் மற்றும் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களின் மேம்பாட்டினை உறுதி செய்யும் வகையிலும் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை எட்டும் வகையிலும் தமிழ்நாடு அரசின் மகளிர் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆதரவற்ற பெண்கள், விதவைகள், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மூன்றாம் பாலினர் ஆகியோரை மேம்படுத்தவும், சமநிலை அடையவும் பல சிறப்புத் திட்டங்களை தமிழ் நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அரசாணை வெளியீடு...

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மற்றும் ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவித் திட்ட ம் ஆகிய திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் பயன் பெற இதுவரை நிர்ணயிக்கப்பட்டிருந்த குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பினை ரூ. 24 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தி அரசால் ஏற்கனவே ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.72 ஆயிரமாக...

சமூக நலத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களுக்கான வருமான வரம்பினை மேலும் உயர்த்தினால், அதிக அளவு ஏழைகள் பயன் பெறுவர் என்பதனால், திருமண நிதி உதவித் திட்டங்களுக்கு ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.72,000/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளதைப் போலவே, சமூக நலத் துறையின் கீழ்செயல்படும் ஏழை விதவைகளின் குழந்தைகளுக்கு இலவசமாக பாடநூல் மற்றும் குறிப்பேடுகள் வழங்கும் திட்டம், தொழில் கூட்டுறவு சங்கங்களில் அங்கத்தினர் அனுமதி, தையல் பயிற்சிகளில் சேர்க்கை, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் சேவை இல்லங்கள், தொழிற் பயிற்சி நிலையங்களில் அனுமதி மற்றும் மூன்றாம் பாலினர் நலத்திட்ட உதவிகள் ஆகிய திட்டங்களின் ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ. 24 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தி நிர்ணயித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இத்திட்டங்களுக்கான ஆண்டு வருமான உச்ச வரம்பினை உயர்த்துவதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதலான பயனாளிகள் பயனடைவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து