முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்துக்கு மாடர்ன் உடையில் வந்தால் என்ன தவறு? இளம் பெண் எம்.பி.க்கள் கேள்வி

சனிக்கிழமை, 1 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, பாராளுமன்றத்துக்கு மாடர்ன் உடையில் வந்தால் என்ன தவறு? என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளம் பெண் எம்.பி.க்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
 
நடிகைகள்...

பிரபல வங்காள நடிகைகளான மிமி சக்ரபோர்த்தியும், நுஸ்ரத் ஜகானும் இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களாக களம் இறங்கினார்கள். 30 வயது நடிகையான மிமி சக்ரபோர்த்தி ஜாதவ்பூர் தொகுதியில் போட்டியிட்டு 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பசிராத் தொகுதியில் போட்டியிட்ட 29 வயது நடிகை நுஸ்ரத் ஜகான் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முதன்முறையாக எம்.பி.ஆகியுள்ள இந்த நடிகைகள் இருவரும் பாராளுமன்றம் சென்றனர். மாடர்ன் உடையில் சென்ற இவர்கள் தங்களது அடையாள அட்டையுடன் பாராளுமன்றத்திற்கு முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

கண்டனம் - வரவேற்பு...

இந்த புகைப்படங்களை தங்களது ட்விட்டர் பக்கத்திலும் பதிவேற்றி உள்ளனர். அதில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கும், தங்களை வெற்றி பெறச் செய்த தொகுதி மக்களுக்கும் தங்களது நன்றிகளை அவர்கள் தெரிவித்துள்ளனர். மிமி மற்றும் நுஸ்ரத்தின் இந்த பாராளுமன்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.  நவநாகரீக உடையில் ஜீன்ஸ் பேண்ட், டீ ‌ஷர்ட் அணிந்து அவர்கள் பாராளுமன்ற வளாகத்தில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ள போதும், இந்த புதிய மாற்றத்தை பலர் வரவேற்றுள்ளனர்.

எதிர்ப்பு ஏன்?

இது குறித்து மிமி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது., நாங்கள் இளம்பெண்கள், ஏன் ஜீன்ஸ், டிசர்ட் அணியக்கூடாது? இவர்கள் எங்கள் ஆடைகள் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்கள். ஆனால் குற்ற பின்னணி கொண்டு ஊழல் மிகுந்து கறை படிந்திருந்தாலும் புனிதமாக ஆடைகளை அணிந்து வரும் பாராளுமன்ற உறுப்பினர்களை பற்றி ஏன் கவலைப் படுவதில்லை? நான் இளைஞர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். அவர்கள் அணிவதையே நான் அணிவதை பார்க்கும் இளைஞர்கள் பெருமிதம் அடைவார்கள். இளம் பருவமுடைய ஆண் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து ஜீன்ஸ் அணிந்து வந்தால், யாரும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள். ஆனால், இதையே ஒரு பெண் செய்துவிட்டால் பிரச்சனை எழுந்துவிடுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து