முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளிக்குடி ஒன்றியத்தில் ரூ.79லட்சம் மதிப்பீட்டில் ஆள்துளை கிணறுகள் அமைத்து மேற்கொள்ளப்பட்ட வறட்சி நிவாரண திட்டப் பணிகள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார்:

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜூன் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கள்ளிக்குடி ஒன்றியத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பயன்பெற்றிடும் வகையில் ஆண்டிபட்டி-சேடபட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.79லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து மேற்கொள்ளப்பட்ட வறட்சி நிவாரண திட்டப்பணிகளை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் டி.கல்லுப்பட்டி,பேரையூர் பேரூராட்சிகள் மற்றும் திருமங்கலம்,கள்ளிக்குடி,டி.கல்லுப்பட்டி ஒன்றியங்களில் 216 ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கு ஆண்டிபட்டி-சேடபட்டி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.வைகை ஆற்றினை நீராதாரமாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் இந்த கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தற்போது நிலவிடும் கடுமையான வறட்சி காரணமாக கடைக்கோடி கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது.இதை தொடர்ந்து கடைநிலை  குடியிருப்புகளுக்கு கோடை காலத்தில் தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்காக பிரதான மேல்நிலைத் தொட்டி,பிரதான தரைமட்டத் தொட்டிகளின் அருகில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் விநியோகித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி கள்ளிக்குடி ஒன்றியத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை,தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கள்ளிக்குடி ஒன்றியத்திலுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் ரூ.79லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் அதனைச் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு 76 குடியிருப்பு மக்களுக்கு 3.91லட்சம் லிட்டர் குடிநீர் கூடுதலாக கிடைத்திட வறட்சி நிவாரண திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டது.இந்த வறட்சி நிவாரண திட்டங்களின் துவக்க விழா நேற்று கள்ளிக்குடி ஒன்றியம் அகத்தாபட்டி மற்றும் வில்லூர் கிராமங்களில் சிறப்புடன் நடைபெற்றது.இவ்விழாவிற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர்(பொ) ரவீந்திரன்,நிர்வாக பொறியாளர் ஹரிபாஸ்கரன்,உதவி நிர்வாக பொறியாளர் கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னாள் யூனியன் சேர்மன்கள் மகாலிங்கம்,தமிழழகன் ஆகியோர் வரவேற்றனர்.
ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட இவ்விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமையேற்று கள்ளிக்குடி ஒன்றியத்தில் ரூ.79லட்சம் மதிப்பீட்டில் வறட்சி நிவாரண திட்டபணிகள் மூலம் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் அதனைச் சார்ந்த பணிகளையும் திறந்து சிறப்புரையாற்றினார். அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: தமிழ்நாடு முழுவதிலும் இருக்கிற 32 வருவாய் மாவட்டங்களில் கோடைகால வறட்சியின் போது நமக்கு பருவமழை பெய்திடாமல் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தாலும் அதை சமாளித்திடவும் மக்களுக்கு தேவையான குடிநீரை பற்றாக்குறையின்றி வழங்கிடவும் முதல்வரும் துணை முதல்வரும் ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார்கள்.வறட்சி காலத்தில் மக்கள் குடிநீர் இன்றி அவதிப்படக்கூடாது என்பதற்காக வறட்சி நிவாரண நிதியின் கீழ் குடிநீர் ஆதாரங்களை பெருக்கிட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மக்களின் தாகத்தை தீர்ப்பதில் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் முக்கிய பங்காற்றி வருகிறது.வறட்சி காலத்தில் கூட்டுகுடிநீர் திட்டத்தின் இணைப்பின் அருகிலிருப்பவர்களுக்கு குடிநீர் இலகுவாக கிடைத்து விடுகிறது.ஆனால் கடைசி பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேர்வது சவாலான பணியாகும்.இதன் தொடர்ச்சியாக தண்ணீர் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் வறட்சி நிவாரண நிதியைக் கொண்டு குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது.மக்கள் பணியில் பல சவாலான கால கட்டங்கள் வருவது உண்டு.பருவமழை பொய்த்தாலும் கூட மக்களின் ஒத்துழைப்புடன் மாற்று நடவடிக்கைகள் மூலம் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு தமிழ்நாட்டில் எங்கும் குடிநீர் பற்றாக்குறை இல்லை என்ற நிலை உருவாக்கிடஇது போன்ற திட்டங்களை அம்மாவின் அரசு உங்களுக்கு அர்ப்பணித்துள்ளது.திருமங்கலம் தொகுதியின் அனைத்து ஊரக குடியிருப்புகளுக்கும் தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எங்கெல்லாம் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதோ அங்கு கழக தொண்டர்கள் மூலம் லாரிகளில் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கிட அனுமதி வழங்கிடுமாறு முதல்வரிடம் நான் அனுமதி கேட்டிருக்கிறேன்.
சில எதிர்கட்சிகளின் தூண்டுதல் காரணமாக அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்திட மறியல்கள் நடத்தப்படுகிறது.கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கிட ரூ.242கோடி முதல் கட்டமாக நிதி வழங்கபட்டு தற்போது 3வது கட்டம் வரை நிதி வழங்கப்பட்டிருக்கிறது. திருமங்கலம் பகுதியில் தற்போது மழை பெய்து பூமி குளிர்ந்தது போல் நமது உள்ளமும் குளிர்கிறது.குடிநீர் விநியோகத்தில் தமிழக முதல்வர் தணிகவனம் செலுத்தி வருகிறார்.மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தந்திடும் போது குடிநீர் பற்றாக்குறையை சமாளித்திட அதிக திட்டங்களை செயல்படுத்திட வாய்ப்பு உள்ளது.குடிநீர் பற்றாக்குறையை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் பெற்றிட முயற்சிக்கிறார்கள்.அதற்கு பொதுமக்கள் ஒருபோதும் இடம்கொடுக்கக்கூடாது.அதை வைத்து அரசியல் ஆதாயம் தேட எதிர்கட்சிகள் முயற்சிக்கிறார்கள்.தடைகளை அனைத்தையும் தகர்த்து தமிழக மக்களுக்கு தேவையான குடிநீரை தங்கு தடையின்றி அம்மாவுடைய அரசு நிச்சயமாக கொடுத்திடும்.இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில் கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி,டிகல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,கல்லுப்பட்டி முள்ளான் துணை சேர்மன் பாவடியான்,கள்ளிக்குடி முன்னாள் துணைச் சேர்மன் கண்ணன்,அவைதலைவர் வேல்பாண்டி,துணைச்செயலாளர் பிரபுசங்கர்,வேல்ராமகிருஷ்ணன் கட்சி நிர்வாகிகள் ராஜா,வில்லூர் சரவணன்,ரவி,சாமிநாதன்,ஆதி(எ)ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து