ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்தியது திருப்புமுனை: ஆஸி.க்கு எதிரான வெற்றி குறித்து கோலி கருத்து

திங்கட்கிழமை, 10 ஜூன் 2019      விளையாட்டு
virat kohli 2019 06 10

லண்டன் : உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்தியது திருப்புமுனையாக அமைந்தது என வெற்றி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

352 ரன் குவிப்பு...

உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா 2-வது வெற்றியை பெற்றது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன் குவித்தது. தவான் சிறப்பாக விளையாடி 17-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 109 பந்தில் 117 ரன்னும் (16 பவுண்டரி), கேப்டன் விராட்கோலி 77 பந்தில் 82 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), ரோகித் சர்மா 70 பந்தில் 57 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), ஹர்திக் பாண்டியா 27 பந்தில் 48 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

2-வது வெற்றி...

ஸ்டோனிஸ் 2 விக்கெட்டும், கும்மின்ஸ் ஸ்டார்க், நாதன் கோல்ட்டர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 316 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் இந்தியா 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டீவ் சுமித் 70 பந்தில் 69 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), வார்னர் 56 ரன்னும், அலெக்ஸ் கேரி 35 பந்தில் 55 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), கவாஜா 39 பந்தில் 42 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். புவனேஷ்குமார், பும்ரா தலா 3 விக்கெட்டும், சாஹல் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.இந்திய அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது.

அதிர்ஷ்டம் தான்...

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது குறித்து கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

இந்திய வீரர்கள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பேட்ஸ்மேன்களும், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ஹர்திக் பாண்டியாவின் அதிரடியான ஆட்டம் அற்புதமாக இருந்தது. நாங்கள் 30 ரன்கள் கூடுதலாகவே எடுத்தது அதிர்ஷ்டம் தான். முதல் 3 நிலை பேட்ஸ்மேன்கள் சதம் அடிக்கும் போது அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியாவை முன்னதாக களம் இறக்குவது என்பதை முடிவு செய்து வைத்து இருந்தோம்.

மிகுந்த மகிழ்ச்சி...

ஆடுகளத்தின் தன்மை மற்றும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு தான் முகமது ‌ஷமிக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. புவனேஷ்வர்குமார் சாம்பியன் பவுலர் ஆவார். அவர் புதிய பந்திலும், பழைய பந்திலும் நேர்த்தியாக வீசக்கூடியவர். புவனேஷ்வர்குமார் ஒரே ஓவரில் சுமித்தையும், ஸ்டோனிசையும் வீழ்த்தினார். இதுவே ஆட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய திருப்புமுனையாகும். ஏனென்றால் இந்த இருவரும் அனுபவம் வாய்ந்தவர்கள். ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நேர்த்தியாக இருந்தது...

தோல்வி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறும் போது, “கடைசி 10 ஓவர்களில் 120 ரன்களை கொடுத்துவிட்டோம். நாங்கள் இலக்கை நோக்கி முன்னேறும்போது விக்கெட்டுகளை இழந்து விட்டோம். இந்திய வீரர்களின் பந்துவீச்சு நேர்த்தியாக இருந்தது” என்றார்.

இந்திய அணி 3-வது ஆட்டத்தில் நியூசிலாந்தை வருகிற 13-ம் தேதி சந்திக்கிறது. ஆஸ்திரேலியா 4-வது போட்டியில் பாகிஸ்தானை நாளை (12-ம் தேதி) எதிர்கொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து