ஹாங்காங் நாடாளுமன்றத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைய முயற்சி - கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடிப்பு

வியாழக்கிழமை, 13 ஜூன் 2019      உலகம்
Hong Kong  protesters 2019 06 13

ஹாங்காங் : ஹாங்காங் நாடாளுமன்றத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர்.

சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வைக்கும் வகையில் கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.ஆனால் தங்கள் நிலப்பகுதியில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஹாங்காங் எல்லைக்குள் விசாரிக்கவேண்டும் என அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனினும் இந்த சட்டத்திருத்தத்துக்கு ஒப்புதல் பெற்று, அதனை அமல்படுத்துவதில் ஹாங்காங் நிர்வாகத்தலைவர் கேரி லாம் உறுதியாக உள்ளார்.

இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹாங்காங்கில் லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.இந்த மாபெரும் போராட்டத்தால் ஹாங்காங் குலுங்கியது. 10 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த நிலையில், ஹாங்காங் நாடாளுமன்றத்தில், கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதா மீது நேற்று விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து நேற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர்.இளைஞர்கள் மற்றும் மாணவர்களை பெருவாரியாக கொண்ட போராட்டக்குழு அரசு அலுவலகங்களுக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் மறித்து, அரசு அலுவலகங்களை இயங்கவிடாமல் முடக்கியது. மேலும் அவர்கள் பேரணியாக சென்று நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயற்சித்தனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கலைந்து போகும்படி எச்சரித்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் செவிசாய்க்கவில்லை. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது தண்ணீரையும், ‘பெப்பர் ஸ்ப்ரே’–வையும் பீய்ச்சி அடித்தனர்.

ஆனாலும் போராட்டக்காரர்கள் குடைகளை பயன்படுத்தி அதனை தடுத்து முன்னேறி சென்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து