சாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: ரஷ்யா மற்று சீன அதிபர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

வியாழக்கிழமை, 13 ஜூன் 2019      உலகம்
pm modi meet Xi Jinping 2019 06 13

பிஷ்கேக் : சாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கான கிர்கிஸ்தான் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு ரஷ்ய, சீன அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

எட்டு நாடுகள்...

கிர்கிஸ்தான் நாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் தலைவர்கள் கூட்டம் இரு நாட்கள் நடைபெறுகிறது. சீனா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான்,கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய எட்டு நாடுகளை கொண்ட அந்த அமைப்பின் கூட்டம் கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக் நகரில்  தொடங்கி உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி  டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.

சீன அதிபருடன்...

டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்ட பிரதமர் மோடி பாகிஸ்தான் வான் பரப்பின் வழியே செல்வதை தவிர்த்து, ஓமன், ஈரான் வழியாக கிர்கிஸ்தான் சென்றார். நேற்று மதியம் 2.30 மணி அளவில் பிஷ்கேக் விமான நிலையத்தில் இறங்கிய மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று மாலை 4.50 மணியளவில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பு வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ரஷ்ய அதிபருடன்...

பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார். உயர் மட்ட அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் பேசிக்கொண்டதாக தெரிகிறது. அமேதியில், ரஷ்யா துப்பாக்கி தொழிற்சாலை அமைக்க உள்ளதையடுத்து, புதினிடம் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக்கொண்டார்.

புதின் அழைப்பு...

இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தை குறித்து வெளியுறவு செயலாளர் கோகலே செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இந்தியா - சீனா இடையேயான உறவை மேம்படுத்துவது தொடர்பாக இன்று (நேற்று) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டது. இந்தியாவில் சீன வங்கியின் கிளையை தொடங்குவது மசூத் அசார் விவகாரம் உள்பட நீண்ட காலமாக நிலுவையில் உள்ள விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.  செப்டம்பர் மாதம் விளாடிவோஸ்க் நகரில் நடைபெறும் கிழக்கு பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்ய அதிபரின் அழைப்பை ஏற்று, மாநாட்டில் பங்கேற்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

கிர்கிஸ்தான் அதிபர்...

நேற்று மாலை கிர்கிஸ்தான் அதிபர் சூரான்பே ஜீன்பெகோவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி மாநாட்டிலும் பங்கேற்றார். கூட்டத்தில் பார்வையாளராக பங்கேற்றுள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரப் கானி, ஈரான் அதிபர் ஹாசன் ருகானி ஆகியோரையும் மோடி சந்தித்தார். இந்த மாநாட்டில் பங்கேற்ற முதல் நாளிலேயே 5 நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று (14-ம் தேதி) கிர்கிஸ்தான் - இந்தியா தலைவர்கள் இருவரும் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள். மேலும் இந்தியா- கிரிகிஸ்தான் வர்த்தக அமைப்பை இருநாட்டு தலைவர்களும் இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து