பயங்கரவாதத்தின் கோரமுகத்தை இலங்கை தேவாலயத்தில் கண்டேன்; பிரதமர் மோடி வேதனை

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2019      உலகம்
Modi 2019 06 14

சமீபத்தில் இலங்கை சென்றிருந்தபோது ஈஸ்டர் தினத்தன்று கொழும்புவில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் கோரமுகத்தை காண முடிந்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இருநாள் மாநாடு நேற்று தொடங்கியது.  இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாத தீமைகளில் இருந்து மக்களை காப்பாற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகள் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை சுட்டிக் காட்டினார்.

பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட ஒரு சமுதாயம் உருவாக இந்தியா எப்போதுமே முன்னுரிமை அளித்து வருவதாக சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, கடந்த ஞாயிற்றுக்கிழமை நான் இலங்கைக்கு சென்றிருந்தபோது கொழும்பு நகரில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தில் அப்பாவி மக்களின் உயிர்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்த பயங்கரவாதத்தின் கோரமுகத்தை என்னால் காண முடிந்தது.

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும், துணைபுரியும், நிதியளித்து ஆதரிக்கும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய பயங்கரவாத ஒழிப்பு பிரிவு அக்கறை காட்ட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து