போலி வங்கி கணக்கு மோசடி:பாகிஸ்தான் முன்னாள் அதிபரின் சகோதரி கைது

சனிக்கிழமை, 15 ஜூன் 2019      உலகம்
Ex-president sister arrest 2019 06 15

இஸ்லாமாபாத் : வங்கிகளில் போலியான பெயர்களில் கணக்கு தொடங்கி சுமார் 15 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரியின் சகோதரியை போலீசார் கைது செய்தனர்.  

பாகிஸ்தானின் யுனைடெட் வங்கி மற்றும் சம்மிட் வங்கிகளில் 29 போலி கணக்குகளை தொடங்கி சுமார் 15 கோடி ரூபாய் அளவில் நிதி மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது. இதில் பாகிஸ்தானின் முன்னாள் அதிபரும், பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத்தலைவருமான ஆசிப் அலி சர்தாரி, அவரது சகோதரி பர்யால் தல்புர் ஆகியோர் உள்பட 20 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்த மோசடி தொடர்பாக சம்மிட் வங்கி தலைவரும், சர்தாரியின் கூட்டாளியுமான உசேன் லவாய் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் அங்கு பூதாகரமாக வெடித்தது.

இந்த முறைகேடு தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணையை பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் பின்னர் ஏற்றது. 

முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் அவரது சகோதரி பர்யால் தல்புர் ஆகியோர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.   

இந்நிலையில், அவரது சகோதரி பர்யால் தல்புரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் கணவரான ஆசிப் அலி சர்தாரி, பெனாசீர் பூட்டோ சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் கடந்த 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்தவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து