உலகக்கோப்பை 22-வது லீக்: இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல் மழையால் ஆட்டம் பாதிக்கப்படும் அபாயம்

சனிக்கிழமை, 15 ஜூன் 2019      விளையாட்டு
ind-pak match 2019 06 15

மான்செஸ்டர் : அனைவரும் எதிர்ப்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் மோதும் 22-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் மழை வரக்கூடாது என ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

தலா 1 முறை...

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 10 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ரவுண்டு ராபின் முறையில் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்‘ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

4-வது இடத்தில்...

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி 3 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 5 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவை 36 ரன் வித்தியாசத்திலும் வென்றது. நியூசிலாந்துடன் மோதிய 3-வது ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

3-வது வெற்றி...

இந்திய அணி 4-வது ஆட்டத்தில் பரம்பரை எதிரியான பாகிஸ்தானை இன்று சந்திக்கிறது. இந்த போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளது.

6 முறையும் வெற்றி...

உலக கோப்பை போட்டியை பொறுத்தவரை இந்திய அணி இதுவரை பாகிஸ்தானிடம் தோற்றது கிடையாது. 6 முறை விளையாடி ஆறு போட்டியிலும் வெற்றி பெற்று முத்திரை பதித்தது. இதனால் நம்பிக்கையுடன் விளையாடும். உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் அதிரடி நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

சமபலத்துடன்...

பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி சம பலத்துடன் திகழ்கிறது. பேட்டிங்கில் ரோகித் சர்மா, கேப்டன் விராட்கோலி, டோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். தொடக்க வீரரான ரோகித் சர்மா ஒரு சதம், ஒரு அரை சதத்துடன் 179 ரன் குவித்துள்ளார். அவரது நிலையான ஆட்டம் அணிக்கு தேவையானது.

4-வது இடத்தில்....

பந்து வீச்சில் யசுவேந்திர சாஹல் (6 விக்கெட்), புவனேஸ்வர்குமார், பும்ரா (தலா 5 விக்கெட்) ஆகியோர் முத்திரை பதிக்கும் வகையில் சிறப்பாக வீசி வருகிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த தவான் காயம் அடைந்து இருப்பது அணிக்கு பெரிய பாதிப்பே. இதனால் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக லோகேஷ் ராகுல் களம் இறங்குவார். அவரது இடமான 4-வது வரிசையில் விளையாட போகும் வீரர் யார்? என்பது உறுதியாகவில்லை.

ஜடேஜாவுக்கு வாய்ப்பு?

தமிழக வீரர்களான விஜய்சங்கர் அல்லது தினேஷ் கார்த்திக் 4-வது வீரர் வரிசையில் இறங்க வாய்ப்பு உள்ளது. 3-வது வேகப்பந்து வீரர் தேவை என்ற நிலை ஏற்பட்டால் குல்தீப் யாதவுக்கு பதிலாக முகமதுசமி தேர்வாகலாம். இதனால் பந்துவீச்சு ஆல் ரவுண்டரான ஜடேஜாவுக்கும் வாய்ப்பு இருக்கிறது.

20 ஆண்டுகளுக்கு பிறகு...

பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் பலமாக இருக்கிறது. இது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும். 1999-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையில் மான்செஸ்டரில் நடந்த சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இந்தியா 47 ரன்னில் பாகிஸ்தானை வீழ்த்தியது. தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளும் அதே மைதானத்தில் மீண்டும் மோதுகின்றன.இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பையில் மோதின. இதில் இரு ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசம் மற்றும் 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது.

8-வது இடத்தில்...

சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் 1 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 3 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் 105 ரன்னில் சுருண்டு 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 2-வது ஆட்டத்தில் 348 ரன் குவித்து இங்கிலாந்தை 14 ரன்னில் வீழ்த்தியது. இலங்கையுடன் மோதிய 3-வது ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 41 ரன்னில் தோற்றது.

முகமதுஅமீர்...

தற்போது இந்தியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் பாகிஸ்தான் உள்ளது. அதோடு உலக கோப்பையில் முதல் முறையாக இந்தியாவை வீழ்த்தி விட வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் இமாம்-உல்-ஹக், பஹர்ஜமான், பாபர் ஆசம், முகமதுஹபீஸ், கேப்டன் சர்பிராஸ் அகமது, ஹசன் அலி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் முகமதுஅமீர் முதுகெலும்பாக இருக்கிறார். வேகப்பந்து வீரரான அவர் 10 விக்கெட் கைப்பற்றி இந்தப் போட்டித் தொடரில் முதல் இடத்தில் உள்ளார். சகீன்ஷா அப்ரிடி, வகாப் ரியாஸ் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களும் அந்த அணியில் உள்ளனர்.

மழையால் பாதிப்பு...

சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இருந்ததால் அந்த அணி நம்பிக்கையுடன் ஆடும். மழையால் ஏற்கனவே 4 போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்திய அணி நியசிலாந்துடன் மோதிய ஆட்டம் கைவிடப்பட்டு இருந்தது. பாகிஸ்தான் அணி இலங்கையுடன் மோதிய ஆட்டம் ரத்து ஆகி இருந்தது. இந்தியா-பாகிஸ்தான் மோதும் பரபரப்பான ஆட்டம் மழையால் பாதிக்கப்படக் கூடாது என்று ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

மான்செஸ்டரில் கடந்த 1 வாரமாக மழை பெய்தது. நேற்று முன்தினம்தான் மழை விட்டு சூரியன் தென்பட்டது. நேற்று பிற்பகலில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இதனால் இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்படுமோ? என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. மழை நேரத்தில் உலக கோப்பைப் போட்டியை வைத்திருக்க கூடாது என்று ரசிகர்கள் ஏற்கனவே ஆதங்கப்பட்டு உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து