சதம் விளாசினார் ஜோ ரூட்: வெஸ்ட் இண்டீசை ஊதி தள்ளியது இங்கிலாந்து !

சனிக்கிழமை, 15 ஜூன் 2019      விளையாட்டு
Joe Root century 2019 06 15

லண்டன் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கெயில் 36 ரன்கள்...

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சவுதாம்டன் நகரில் நேற்று முன்தினம் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெயில், லெவிஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். லெவிஸ் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை தொடங்கிய கெயில் 41 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ரஸல் 21 ரன்கள்...

அவரை தொடர்ந்து ஹோப் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். பூரான், ஹெட்மயர் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. ஹெட்மயர் 39 ரன்களிலும் அடுத்து வந்த ஹோல்டர் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ரஸல் வந்த வேகத்தில் இரண்டு சிக்ஸர் பறக்கவிட்டு 21 ரன்னில் அவுட் ஆனார். நின்று ஆடிய பூரான் 63 ரன்னில் ஆட்டமிழந்து 44.4 ஓவரில் 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

ஜோ ரூட் அதிரடி...

இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர், உட் தலா 3 விக்கெட்டையும் ரூட் இரண்டு விக்கெட்டுகளையும் சாய்த்தனர். பேட்டிங் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.  தொடக்க ஆட்டக்காரர்களாக பேரிஸ்டோவும், ஜோ ரூட்டும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி விக்கெட்டுகளை பாதுகாத்தனர். பேரிஸ்டோ 45 ரன்னில் முதல் விக்கெட்டாக வீழ்ந்தார். இதையடுத்து களமிறங்கிய வோக்ஸ் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மூன்றில் வெற்றி...

அவரைத்தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார். நிலைத்து ஆடிய ஜோ ரூட் அணியை வெற்றிப் பாதையில் அழைத்து சென்றார். 94 பந்துகளில் சதம் விளாசினார் ரூட். 33. 1 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 213 ரன்கள் எடுத்து தங்களது இலக்கை எளிமையாக கடந்தது. இதனால் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி அதில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து