கோதாவரி - காவிரி நதிகளை இணைக்க வேண்டும்: ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை ரூ.4,458 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் - நிதிஆயோக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி வலியுறுத்தல்

சனிக்கிழமை, 15 ஜூன் 2019      இந்தியா
cm edapaid nithiaayok meeting 2019 06 15

புதுடெல்லி : கோதாவரி மற்றும் காவிரி நதிகளை முன்னுரிமை அடிப்படையில் இணைக்க வேண்டும். தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை ரூ.4,458 கோடியை உடனே விடுவிக்க வேண்டும். ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தலா ஒரு மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று டெல்லியில் நேற்று நடந்த நிதிஆயோக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில், மாநில முதல்வர்கள் பங்கேற்ற நிதிஆயோக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த மழை நீர் சேகரிப்பு திட்டம், குடிமராமத்து திட்டம், தமிழகத்தில் தற்போது நிலவும் வறட்சி நிலைமை, அதை தீர்க்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும், இராமநாதபுரம், ஓசூர் ஆகிய இடங்களில் விமான சேவைகளை துவக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது.,

கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு - பாலாறு - காவேரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தினை காலதாமதமின்றி விரைந்து மேற்கொள்ள வேண்டும். கங்கை சீரமைப்பு திட்டம் போன்று காவேரி ஆற்றினை சீரமைக்க மத்திய அரசு "நடந்தாய் வாழி காவேரி" திட்டத்தினை செயல்படுத்திட வேண்டும். காவேரி வடிநிலத்தின் ஒன்பது பாசன அமைப்புகளையும் மேம்படுத்தி, புனரமைக்கும் திட்டத்தை (17,600 கோடி ரூபாய் மதிப்பீட்டுத் தொகையில்) தேசிய திட்டத்தின் கீழ் செயல்படுத்த தொழில்நுட்ப பொருளாதார மற்றும் முதலீட்டு அனுமதி வழங்க வேண்டும்.

152 அடியாக உயர்த்த...

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவிற்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தினை 152 அடியாக உயர்த்த தேவையான அனுமதிகளை வழங்கிட வேண்டும். தமிழ்நாட்டில் நீர் ஆதாரங்களை உருவாக்கிடவும், நிலத்தடி நீரில் கடல் நீர் உட்புகுதலை தடுத்திட பழமையான நீர் ஆதாரங்களை மேம்படுத்திடவும், தேவையான நிதியினை அளித்திட வேண்டும். தமிழ்நாட்டின் கருத்துக்களை கேட்டு, நம் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வரை, அணைப் பாதுகாப்புச் சட்டம் இயற்றுவதை நிறுத்தி வைக்க வேண்டும்.

புதிய விமான நிலையம்...

மின்சார திருத்த மசோதா 2014-ஐ சட்டமாக இயற்ற மத்திய அரசு மேலும் நடவடிக்கைகளை தொடரக் கூடாது. மேலும், மாநிலங்களின் கருத்துக்களை கேட்ட பின்னர் தான், மோட்டார் வாகன திருத்தச் சட்ட மசோதா 2017-ஐ சட்டமாக்க வேண்டும். சென்னையில் ஒரு புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு தகுந்த பொருளாதார மற்றும் தொழில் நுட்ப ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-2-ஐ  தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு கூட்டு பங்களிப்பு திட்டமாக அனுமதிக்க வேண்டும்.

வானூர்தி சேவையை...

ராணுவ தளவாடங்கள் உற்பத்தி மையத்தினை சேலம் இரும்பு எஃகு ஆலை வளாகத்தில் உள்ள காலியிடத்தில் அமைக்குமாறு கோரிக்கை வைக்கிறேன். உதான் திட்டத்தின் கீழ் ஓசூர், நெய்வேலி மற்றும் இராமநாதபுரம் ஆகிய இடங்களுக்கு வானூர்தி சேவையினை தொடங்க வேண்டும். மாநிலத்தின் பல்வேறு திட்டங்களுக்காக ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை விரைந்து நில மாற்றம் செய்ய வேண்டும் என்ற கேட்டுக் கொள்கிறேன்.

உள்ளாட்சி அமைப்புகள்...

தமிழ்நாட்டில் பாரத் நெட் நிலை -ஐ திட்டத்திற்கான வரைவு திட்ட அறிக்கைக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும். 14-வது நிதிக் குழுவில் நிதி பெறுவதில் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பின்னடைவை சரிசெய்யும் விதத்தில் 2,000 கோடி ரூபாய் சிறப்பு உதவி அளித்திட வேண்டும். 2017-18 மற்றும் 2018-19-ம் ஆண்டிற்கான செயல்முறை மானியம் மற்றும் 2018-19-ம் ஆண்டிற்கான அடிப்படை மானியத்தினை உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு நிலுவைத் தொகை 940 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி நிலுவைத் தொகை 4,458 கோடி ரூபாயும் விரைந்து வழங்கிட கோரிக்கை வைத்தேன்.

மருத்துவக் கல்லூரி...

மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய பல்வேறு திட்டங்களுக்கான நிதி மற்றும் மானிய நிலுவைகளை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு திட்டங்களின் மூலமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க அனுமதி தரவேண்டும். பருவநிலை மாற்றத்தினை எதிர்கொள்ள சமர்ப்பிக்கப்பட்ட பல்வேறு திட்ட அறிக்கைகளுக்கு உரிய அனுமதிகளை விரைந்து வழங்க வேண்டும் என்று இந்த தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

தொழில்நுட்ப உதவிகள்...

புயல் பாதிப்பிற்கு உள்ளாகும் தமிழக கடலோர மாவட்டங்களில் மின் விநியோகத்தினை பூமிக்கடியில் பதித்து விநியோகம் செய்யத் தேவையான 7,000 கோடி ரூபாய் நிதி வழங்கிடவேண்டும்.  ஏழை எளியோருக்கு 8 லட்சம் வீடுகள் வழங்கவும், குறிப்பாக, கஜா புயலினால் வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின்கீழ் இரண்டு லட்சம் வீடுகள் கட்டவும் சிறப்பு அனுமதி வழங்க வேண்டும். சென்னையில் நிரந்தர வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி 7,000 கோடி ரூபாய் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்க வேண்டும். மீனவர்கள் கடலுக்குள் சென்று காணாமல் போகும் தருணத்தில் அவர்களை மீட்கும் பொருட்டு ஹெலிகாப்டர் தளம் அடங்கிய இந்திய கடற்படை தளம் ஒன்றை கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைப்பதற்கு பிரதமர் அவர்களை இந்த நேரத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன்.

நீட் தேர்வில் இருந்து...

தமிழ்நாட்டில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையினை போக்க செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களுக்கு குறிப்பாக பேரூர் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு உரிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்கள் நலன் கருதி இனி மருத்துவ மாணவ சேர்க்கைக்கு நீட் தேர்வினை தொடராமல் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். விவசாய விளைபொருட்களான பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை விவசாய பெருமக்கள் சேமித்து வைத்து, உரிய விலை கிடைக்கும் விதமாக, தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு அரசு தற்போது 10 மாவட்டங்களில் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் இம்மாதிரியான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த தேவையான நிதி உதவியினை அளிக்க வேண்டும்.

இந்த கூட்டத்திற்கு பிறகு டெல்லியில் நிரூபர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கண்ட கோரிக்கைகளை நிதிஆயோக் கூட்டத்தில் வலியுறுத்தியதை சுட்டிக்காட்டினார். கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு நிதியுதவி கோரியதாகவும் அவர் தெரிவித்தார்.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து