மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின் பாராளுமன்றம் இன்று முதல் முறையாக கூடுகிறது - புதிய எம்.பி.க்கள் பதவியேற்கிறார்கள்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2019      இந்தியா
pm modi 2019 05 01

புது டெல்லி : பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2-வது முறையாக பதவியேற்ற பிறகு பாராளுமன்ற கூட்டத் தொடர் முதல் முறையாக இன்று கூடுகிறது. இந்த கூட்டத் தொடரில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொள்கிறார்கள். ஜூலை மாதம் 5-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்த தேர்தலில் 300-க்கும் அதிகமான இடங்களை பாரதீய ஜனதா கைப்பற்றியது. ஆனால் அதே நேரம் காங்கிரஸ் கட்சி இத்தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. கடந்த முறை 44 இடங்களில் வென்றிருந்த காங்கிரஸ் கட்சி இம்முறை கூடுதலாக வெறும் 8 இடங்களை மட்டுமே பெற்று அதாவது 52 தொகுதிகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதில் ராகுல் காந்தி இன்னமும் உறுதியாக இருக்கிறார்.

மோடி அரசு பதவியேற்பு

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு 2-வது முறையாக பதவியேற்றது. பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களுக்கு கடந்த 30-ம் தேதி ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இம்முறை மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றுள்ளார். ஏற்கனவே நிதியமைச்சராக இருந்த அருண்ஜெட்லி தனது உடல்நிலை காரணமாக மத்திய அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ள விருப்பப்படவில்லை. அதையடுத்து நிர்மலா சீதாராமன் மத்திய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டு அவரும் பதவியேற்றுள்ளார். அதே போல் சுஷ்மா ஸ்வராஜூம் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் வகித்த வெளியுறவு துறை அமைச்சர் பதவி வெளியுறவு செயலாளராக இருந்த ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு சில மாற்றங்களோடு மத்திய அமைச்சரவை பொறுப்பேற்றுள்ளது. பதவியேற்ற சில நாட்களில் பிரதமர் மோடி ஷாங்காய் மாநாட்டிலும் கலந்து கொண்டு டெல்லி திரும்பினார். அதையடுத்து டெல்லியில் நேற்று முன்தினம் அவர் தலைமையில் நிதிஆயோக் கூட்டமும் நடைபெற்று முடிந்துள்ளது.

முதல் கூட்டத் தொடர்

இந்த நிலையில், பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இனஅறு தொடங்குகிறது. இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள பா.ஜ.க. எம்.பி. வீரேந்திரகுமார், இந்த கூட்டத் தொடரில் புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். 17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கி ஜூலை 26-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் அதாவது இன்று புதிய எம்.பி.க்கள் பதவியேற்கிறார்கள். வரும் 19-ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 20-ம் தேதி பாராளுமன்றத்தின் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை நிகழ்த்துகிறார். அதன் பிறகு அவர் உரை மீதான விவாதம் நடைபெறும். ஜூலை மாதம் 4-ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்.

5-ம் தேதி பட்ஜெட்

மறுநாள் 5-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை புதிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல் முறையாக தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தொடர்பாக அவர் பல்வேறு தரப்பினருடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். பா.ஜ.க. தலைமையிலான அரசு மீண்டும் பொறுப்பேற்றுள்ளதால் இந்த பட்ஜெட்டில் சில சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத் தொடரில் 38 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. முத்தலாக் மசோதா, காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்கும் மசோதாக்கள் உட்பட பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன.

மன்மோகன் பங்கேற்க இயலாது

இந்த கூட்டத் தொடரில் முன்னாள் பிரதமர்கள் யாரும் பங்கேற்க இயலாமல் போய் விட்டது. மன்மோகன்சிங்கின் ராஜ்யசபா எம்.பி. பதவிக்காலம் முடிந்து விட்டது. அதனால் அவர் பங்கேற்க இயலாது. அதே போல தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் தேவகவுடா இந்த தேர்தலில் தோல்வியை தழுவி விட்டார். அதனால் அவரும் இந்த கூட்டத் தொடரில் பங்கேற்க இயலாது. மொத்தத்தில் இந்த கூட்டத் தொடரில் முன்னாள் பிரதமர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் இந்த கூட்டத் தொடர் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து