குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு போர்க்கால நடவடிக்கை: முல்லை பெரியாறு, காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் செய்தது தி.மு.க. - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2019      தமிழகம்
RB Udayakumar 2018 7 16

மதுரை : முல்லைபெரியாறு, காவிரி, போன்றவற்றில் தமிழர்களுக்கு துரோகம் செய்தது தி.மு.க. என்றும்,  போர்க்கால அடிப்படையில் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வரும் அம்மாவின் அரசை விமர்சிக்க தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் கிடையாது என்றும் உசிலம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் பா. நீதிபதி முன்னிலை வகித்தார், ஜமாபந்தி நிகழ்ச்சியில் 400 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். சரவணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியம்மாள், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஐயப்பன், பஞ்சம்மாள், ஒன்றிய செயலாளர்கள் பிச்சைராஜன், ராஜா, அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், நகர் செயலாளர் பூமாராஜா, மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது,

வருவாய்த் துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் இந்த ஜமாபந்தி நிகழ்ச்சி ஒரு சம்பிரதாய நிகழ்ச்சியாக இருந்ததை ஒரு சாதனை நிகழ்ச்சியாக நாம் நடத்தி வருகிறோம். ஆனால் 3 மாதங்களுக்கு முன்பாகவே 32 மாவட்டங்களில் வறட்சியான காலங்களில் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வண்ணம், முதல்வர் ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்டார். அதில் வறட்சியான காலங்களில் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வண்ணம் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக குக்கிராமங்களிலும் குடிநீர் பிரச்சனையை போக்கும் வண்ணம் மாநகராட்சி, நகராட்சி, ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் முதற்கட்டமாக ரூ. 262 கோடி ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து உள்ளாட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் குடிநீர் திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டது.

முன்பெல்லாம் 400 அடிகள் ஆழ்துளை குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது 1000 அடிக்கு மேல் ஆழ்துளை குழாய் அமைத்து மக்களுக்கு குடிநீர் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் விவசாய நிலங்களில் இருக்கும் கிணறுகளில் விவசாயிகளின் அனுமதி பெற்று அதில் இருக்கும் நீரை லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கவும், அதே போல் ஏரி, கண்மாய்களில் நீர் இருந்தாலும், குவாரிகளில் நீர் இருந்தாலும் அதை சுத்திகரித்து முழுவீச்சில் மக்களுக்கு வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் பருவமழை பெய்யாததால் ஏரி, கண்மாய்களில் நீர் வறண்டு இருந்தும் அதிலிருந்து மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை முதல்வரும், துணை முதல்வரும் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து அமைச்சர்களையும் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

இதே உசிலம்பட்டி பகுதியில் 58 கால்வாய் திட்ட பணியை முழுமைபடுத்தி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக அம்மா அரசு கொண்டு வர உள்ளது. உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு ரூ. 51 கோடியில் கூட்டு குடிநீர்த்திட்டம் செயல்பட உள்ளது. ஆனால் இந்த அம்மா அரசின் மீது வாய்கூசாமல் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தவறிய அரசு என்று ஸ்டாலின் உளறி வருகிறார். மக்களாகிய உங்கள் முன்பு ஸ்டாலினுக்கு கேள்வி கேட்கின்றேன். தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சனையான காவிரியையும், முல்லை பெரியார் பிரச்சனையில் தமிழகத்திற்கு துரோகம் செய்தது யார், காவிரி பிரச்சனையை இன்றைக்கு அம்மா வழியில் சென்று போராடி காவிரி மேலாண்மை ஆணையத்தை முதல்வரும், துணை முதல்வரும் அமைத்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி உள்ளனர். அதே போல் முல்லை பெரியாரை அம்மா  மீட்டு தந்தார். அதன் மூலம் கோடி கணக்கான விவசாயிகளை காப்பாற்றியது அம்மாவின் அரசு. தென் மாவட்டத்தின் 50 லட்சம் மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைத்தது அம்மாவின் அரசாகும். இந்த அரசைப்பற்றி விமர்சிக்க ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் கிடையாது.

மத்திய அமைச்சர் நிதின்கட்காரி நதிநீர் இணைக்கப்படும். அதன் மூலம் தமிழகத்திற்கு தண்ணீர் பஞ்சமே வராது என்று கூறியுள்ளார். அதற்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். தொலைநோக்கு திட்டமான கங்கை, கோதாவரி நதி இணைப்புத் திட்டத்தில் வைகை நதியையும் இணைக்க வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். இந்த நதிகள் இணைப்பின் மூலம் எப்பொழுதும் தமிழகத்திற்கு தண்ணீர் பஞ்சம் வராது. இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து