முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் ஹோட்டல்கள் மூடப்படவில்லை: மு.க.ஸ்டாலின் கருத்துக்கு தமிழக அரசு கண்டனம் - நீரை சிக்கனமாக பயன்படுத்த அமைச்சர் வேண்டுகோள்

திங்கட்கிழமை, 17 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் ஹோட்டல்கள் மூடப்படவில்லை என்று மு.க.ஸ்டாலின் கருத்துக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நவம்பர் மாதம் வரை...

தமிழகத்தில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகம் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று விரிவான ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

சென்னை மாநகரில் இன்றைய தேதியில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் நீர் இருப்பு 26 மில்லியன் கன அடி அளவே உள்ளது. வீராணம் ஏரியிலிருந்து தினசரி 543 மில்லியன் கன அடி நீர் பெறப்பட்டு மாநகர குடிநீர் விநியோகத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகருக்கு தினமும் ஜூலை 1-ம் தேதி முதல் நவம்பர் 2019 மாதம் வரை மழை பொழிவு இல்லாவிடினும், நெம்மேலி மற்றும் மீஞ்சூர் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் மூலம் 180 மில்லியன் லிட்டர் குடிநீரும், வீராணம் ஏரியிலிருந்து 90 மில்லியன் லிட்டர் குடிநீரும், நெய்வேலி சுரங்கத்திலிருந்து 60 மில்லியன் லிட்டர் குடிநீரும், நெய்வேலி பகுதியில் ஏற்கனவே உள்ள 22 ஆழ்துளை கிணறுகளிலிருந்து 20 மில்லியன் லிட்டர் குடிநீரும், இதே பகுதியில் புதிதாக போடப்பட்டுள்ள 9 ஆழ்துளை கிணறுகளிலிருந்து 10 மில்லியன் லிட்டர் குடிநீரும் , திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம், பூண்டி, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள தனியார் ஆழ்துளை கிணறுகள் மூலம் 110 மில்லியன் லிட்டர் குடிநீரும், மாகரல் - கீழானூர் பகுதிகளில் குடிநீர் வாரியத்தால் அமைக்கப்பட்ட 13 ஆழ்துளை கிணறுகள் மூலம் 15 மில்லியன் லிட்டர் குடிநீரும், விரிவாக்கப்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் 20 மில்லியன் லிட்டர் குடிநீரும், ரெட்டை ஏரி மற்றும் எருமையூர் கல்குவாரி ஆகியவற்றிலிருந்து 2 மாத காலத்திற்கும், அதன் பின்னர் செப்டம்பர் 2019 முதல் நவம்பர் 2019 வரை அயனம்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஏரிகளிலிருந்து தலா 10 மில்லியன் லிட்டர் வீதம் மொத்தம் 20 மில்லியன் லிட்டர் குடிநீரும், ஆக மொத்தம் நவம்பர் 2019 மாதம் முடிய 525 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னை மாநகருக்கு வழங்கப்படும்.

குடிநீர் வழங்க நடவடிக்கை

தமிழகத்தில் குடிநீர் விநியோகம் தொய்வின்றி வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தற்போது நிலவும் சூழ்நிலையில் வீண் வதந்திகளை நம்பி, செயற்கையான தட்டுப்பாட்டினை உருவாக்க வேண்டாம்.

எதிர்கட்சிகள், இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, வீண் வதந்திகளை பரப்பக் கூடாது. சென்னை மாநகரில், குடிநீர் விநியோகப் பணிகளை கவனிக்க ஒவ்வொரு மண்டலத்திற்கும் 1 கண்காணிப்பு பொறியாளர், 1 செயற்பொறியாளர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்படும். மேலும், 3 மண்டலங்களுக்கு ஒரு தலைமை பொறியாளர் வீதம் இக்குழுக்களின் பணிகளை தினமும் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உடனுக்குடன் நிவர்த்தி...

பெருநகர சென்னை மாநகராட்சியிலுள்ள அனைத்து ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளும், இரு மண்டலங்களுக்கு ஒருவர் வீதம் 15 மண்டலங்களிலும், காலை 6 மணி முதல் குடிநீர் விநியோகப் பணிகளை பார்வையிட்டு குறைகளை நிவர்த்தி செய்வார்கள்.  சென்னை மாநகரில் 200 வார்டுகளிலுள்ள பணிமனை பொறியாளர்களின் குடிநீர் விநியோக பணிகளை கண்காணிக்க கைசால் ஆப் என்ற செயலி மூலம் அவர்கள் ஆய்வு செய்யும் இடம், நேரம் போன்றவை தலைமை அலுவலகத்திலிருந்து கண்காணிக்கப்பட்டு உடனுக்குடன் குறைகள் நிவர்த்தி செய்யப்படும். சென்னை குடிநீர் வாரியத்தில், குடிநீர் மற்றும் அனைத்து விதமான புகார்களை தெரிவிக்க சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் 044-45674567 என்ற தொலைபேசி எண்ணில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேண்டுகோள்...

ஊராட்சிகளைப் பொறுத்தவரை ஊராட்சி ஒன்றியம் வாரியாக 385 ஊராட்சி ஒன்றியங்களிலும் குடிநீர் புகாருக்கென தனி செயலியும், கட்டணமில்லா தொலைபேசியும் உருவாக்கப்படும்.

இச்செயலிகள் வழியாக குடிநீர் பற்றிய புகார்கள் மட்டும் பெறப்பட்டு, புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து புகார்தாரருக்கு பதில் அளிக்கப்பட வேண்டும். மேலும், கட்டணமில்லா தொலைபேசி மற்றும் தனி செயலியில் பெறப்படும் குடிநீர் பற்றிய புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாக்கப்பட்ட குடிநீரை குடிநீர் பயனுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  பூங்கா, செடிகொடிகள், மரங்கள் போன்றவற்றிற்கு குடிநீரை பயன்படுத்தக் கூடாது. பொதுக் குழாய்களில் தண்ணீர் வீணாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் குளியல் தொட்டிகள் மற்றும் ஷவரில் குளித்து தண்ணீர் வீணாக்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பாதிக்கப்படவில்லை...

குடிசைப் பகுதிகளிலும், ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் அதிக கவனம் செலுத்தி சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும். பொதுமக்கள் குடிநீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

தனியார் உணவகங்கள் தங்கள் தண்ணீர் தேவையை மெட்ரோ வாட்டர் குடிநீர் குழாய் இணைப்பு மூலமும் மற்றும் தனது சொந்த ஏற்பாட்டின் மூலம் பூர்த்தி செய்து கொள்கின்றனர். ஐ.டி. ஊழியர்கள் அவர்களது இல்லத்தில் இருந்தே பணியாற்றும் வசதியை ஆரம்பம் முதலே பெற்றுள்ளனர்.

சென்னை பெருநகரில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக எந்த ஒரு அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்கம் பாதிக்கப்படவில்லை. அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கி வருகிறது. சென்னையில் ஹோட்டல்கள் மூடப்படவில்லை.

7,300 மில்லியன் லிட்டர்...

அம்மாவின் நீர்மேலாண்மை திட்டங்களால் 2011 முதல் 2016 வரையிலான ஐந்து ஆண்டுகளில், குடிநீர் திட்டப் பணிகளுக்காக, 21,988 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் ரூபாய் 15 ஆயிரத்து 838 கோடியில் குடிநீர் திட்டப்பணிகளை மேற்கொண்டது. அதன் காரணமாக இன்றைய தினம் தமிழகம் முழுவதும் 7,300 மில்லியன் லிட்டர் குடிநீர் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.  இது தி.மு.க. ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டதை விட 2400 மில்லியன் லிட்டர் கூடுதலாகும்.

சென்னையில் குடிநீர் தேவையை தெரிந்து கொள்ளாமல் சென்னை நகருக்கு மட்டும் 7 ஆயிரம் மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்குவதாக தெரிவித்துள்ளதாக தி.மு.க. தலைவர்  ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார்.

தெளிவுபடுத்தியுள்ளோம்...

கடும் வறட்சியினால் சென்னை நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய ஏரிகள் வறண்ட நிலையிலும் நவம்பர் இறுதி வரை தற்போது வழங்கப்பட்டு வரும் 525 மில்லியன் லிட்டர் குடிநீர் தொடர்ந்து வழங்கப்படும் என்பதை பல்வேறு தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள் செய்தி வாயிலாக நானும், துறை அதிகாரிகளும் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளோம். இந்த உண்மை நிலை தெரிந்தும் இது போன்ற இயற்கை பாதிப்பின்போது பொதுமக்களுக்கும், அரசுக்கும் உதவும் வகையில் மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பை நல்குவர். மாறாக எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இயற்கை வஞ்சித்ததால் ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையை அரசியலாக்கி, பொதுமக்களுக்கு பீதியை உருவாக்கும் வகையில் செயல்படுவது மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் அளிக்கிறது. முதல்வரின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட குழு அனுப்பி வறட்சி பாதித்த பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து