மாற்றுப்பொருளை பயன்படுத்துங்கள்: தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

திங்கட்கிழமை, 17 ஜூன் 2019      தமிழகம்
cm edapadi 2019 06 17

 சென்னை : தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கிற்கு பதிலாக மாற்று பொருளை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு தடை...

தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 1-ம் தேதியன்று பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், விற்பதற்கும் அரசு தடை விதித்தது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், நேற்று முதல் பிளாஸ்டிக்கை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோரிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளது.

அரசு சுற்றறிக்கை...

பிளாஸ்டிக்கை சேமித்து வைத்தல், விற்பனை செய்தல் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் முதல் முறை பிடிப்பட்டால் 25 ஆயிரமும், இரண்டாவது முறை பிடிப்பட்டால் ஐம்பதாயிரமும், மூன்றாவது முறை சிக்கினால் ஒரு லட்ச ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட உள்ளது. நான்காவது முறையாக பிடிபட்டால், விற்பவரின் கடை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அரசு தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

முதல்வர் வேண்டுகோள்...

இதுகுறித்து அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பிளாஸ்டிக்கிற்கு பதிலாக மாற்றுப்பொருளை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

குடிநீர் தட்டுப்பாடு...

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளும் வரலாறு காணாத வகையில் வறண்டு விட்டன. இதனால் சென்னை மாநகர பொதுமக்களுக்கு கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள், வீராணம், நெய்வேலி நீர்ப்படுகை, தாமரைப்பாக்கம் மற்றும் மீஞ்சூரில் உள்ள விவசாய கிணறுகள், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் ஆதாரங்கள் மற்றும் சிக்கராயபுரம் கல்குவாரிகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

முதல்வர் ஆலோசனை...

இதுபோல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே நடத்தியுள்ளார். இந்நிலையில், குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது குறித்து ஆய்வு செய்யவும், மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வரும் காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து