மோர்கன் அதிரடி ஆட்டம் : ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ரன்கள் குவிப்பு

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019      விளையாட்டு
England 2019 06 18

Source: provided

மான்செஸ்டர் : மான்செஸ்டர் போட்டியில் மோர்கன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 397 ரன்கள் குவித்துள்ளது.

24-வது லீக்

இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 24-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பேர்ஸ்டோவ், ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் உடன் பந்து வீச்சை தொடங்கியது ஆப்கானிஸ்தான். முதலில் இங்கிலாந்து அணி நிதானமாக விளையாடியது. வின்ஸ் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

57 பந்தில் சதம்

அடுத்து பேர்ஸ்டோவ் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. பேர்ஸ்டோவ் 99 பந்தில் 90 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து 29.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் கேப்டன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். மோர்கன் தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இங்கிலாந்தின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 36 பந்தில் அரைசதம் அடித்த மோர்கன், 57 பந்தில் சதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய ஜோ ரூட் 54 பந்தில் அரைசதம் அடித்து சதத்தை நோக்கிச் சென்றார்.

397 ரன்கள் குவிப்பு...

இருவருடைய ஆட்டத்தை வைத்து பார்க்கும்போது இங்கிலாந்தின் ஸ்கோர் 400 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 47-வது ஓவரில் இருவரும் ஆட்டமிழந்தனர். ஜோ ரூட் 82 பந்தில் 88 ரன்களும், மோர்கன் 71 பந்தில் 4 பவுண்டரி, 17 சிக்சருடன் 148 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

மோர்கன் ஆட்டமிழக்கும்போது இங்கிலாந்து 47 ஓவரில் 359 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் தலா 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். மொயீன் அலி 9 பந்தில் 31 ரன்கள் விளாச இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்துள்ளது.

398 ரன்கள் இலக்கு...

இங்கிலாந்து 11.2 ஓவரில் 50 ரன்னையும், 19.3 ஓவரில் 100 ரன்னையும், 26.4 ஓவரில் 150 ரன்னையும், 35.1 ஓவரில் 200 ரன்னையும், 39.3 ஓவரில் 250 ரன்னையும், 43.5 ஓவரில் 300 ரன்னையும், 46.2 ஓவரில் 350 ரன்னையும் கடந்தது. பின்னர் 398 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து